Skip to main content

முகக்கவசம், கிருமிநாசினிகள் அதிக விலைக்கு விற்பனை!- தடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினி திரவங்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

masks and sanitizers high price chennai high court government

இதன் அடிப்படையில், பிற மாநில அரசுகள் உத்தரவுகளைப் பிறப்பித்த போதும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

அந்த மனுவில், அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள முகக்கவசம், கிருமி நாசினிகளைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும். மேலும், சென்னையில் முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலனளிக்காது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும்  மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இதுசம்பந்தமாக தமிழக அரசு மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்