
திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட WB ரோட்டில் செயல்பட்டு வருகிறது ஜெய குரு ஏஜென்சி. இங்கு மோட்டார் பம்பு உதிரிப்பாகங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கடையை பூட்டிவிட்டு நேற்று கடையின் உரிமையாளர் சென்ற நிலையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அடையாளம் தெரியாத முகமூடி கொள்ளையர்கள் கடையின் முன்பாக ஷட்டரை நெம்பி உள்ளே நுழைந்து திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் இதனைக் கண்டு பிடித்தனர். இந்த கடையில் இருந்து 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். அதே போல் இதன் அருகில் உள்ள கிருஷ்ணா டாப்ஸ் அண்ட் பிட்டிங்ஸ் கடையில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். திருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடியுடன் கடையின் பூட்டை உடைத்து திருடும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.