Skip to main content

மாசிமகத் திருவிழா... பிரம்மாண்ட சிலைக்கு குவியும் காகிதப்பூ மாலைகள்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

Masimagam Festival Paper flower garlands pile up for the huge horse statue

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ளது அய்யனார் கோவில். இது ஆசியாவிலேயே உயரமான சிலையாகக் கூறப்படுகிறது. 33 அடி உயரம் கொண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழா இரண்டு நாட்கள் நடத்தப்படுவது வழக்கம்.

 

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பிரம்மாண்ட குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலை அணிவிப்பதும் மறுநாள் இரவு தெப்பத் திருவிழாவும் தான். இந்த பிரம்மாண்ட குதிரை சிலைக்குப் பக்தர்கள் காணிக்கையாக அணிவிக்கும் காகிதப்பூ மாலைகள், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, ஆவணத்தான் கோட்டை, திருச்சிற்றம்பலம் ஆகிய பல கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது.

 

Masimagam Festival Paper flower garlands pile up for the huge horse statue

 

இந்த வருடம் கரோனா கட்டுப்பாடுகளால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு நாள் முன்னதாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. முதல் நாளில் கிராமத்தின் சார்பில் சிறப்பு வழிபாடுகள் செய்தபிறகு குதிரை சிலைக்கு முதல் மாலையாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் மலர் மாலைகள் மற்றும் காகிதப்பூ மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

 

இந்த மாலைகளை கார், டாடா ஏஸ், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றிவந்து அணிவிக்கின்றனர். கிராமத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் மாலைகள் அணிவிக்க நீண்ட வரிசையில் வாகனங்களில் காத்திருக்கின்றனர். பலர் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செய்தனர். இந்த வருடம் 2 நாட்கள் மாலைகள் அணிவிக்கப்படுகிறது. பல இடங்களிலும் அன்னதானமும் நடைபெறுகிறது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.