Advertisment

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

bala

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

Advertisment

’’இயற்கை வளங்களை தனியாரின் லாபத்திற்கு திறந்து விடும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் நெடுவாசல் உட்பட இந்திய அளவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 2015ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. ஹைட்ரோ கார்பன் உரிமம் என்கிற பெயரில் எண்ணெய் மற்றும் பல வகை இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. சர்வதேச அளவில் ஏலம் விடப்பட்டு நெடுவாசல் திட்டம் ஜெம் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.

Advertisment

மத்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து இத்திட்டத்தை எதிர்த்து 2017 பிப்ரவரியிலிருந்து நெடுவாசல் கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர். வடகாடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதோடு, குத்தகையை தமிழக அரசு தங்களது நிறுவனத்திற்கு மாற்றித் தராததால் இத்திட்டத்தை கைவிடுவதற்கு தயாராக உள்ளதாகவும், மாற்று இடம் / மாநிலத்தை ஒதுக்கித்தருமாறும் எரிவாயு மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளதாக ஜெம் நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது நெடுவாசல் கிராம மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். விவசாயம், சுற்றுச்சூழல், நீராதாரம் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதற்காக கடந்த ஓராண்டிற்கு மேலாக உறுதியுடன் போராடிய நெடுவாசல் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக மக்கள் எங்கு போராடினாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்குத் துணை நிற்கும், போராட்டத்தில் பங்கேற்கும்.

இச்சூழலில் வேறு எந்த நிறுவனத்திற்கும் இத்திட்டத்தை மாற்றக்கூடாது, இதனை முற்றிலுமாக கைவிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இது குறித்து தமிழக அரசு மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.’’

Central government hydrocarbon Project
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe