/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_14.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன். இவருக்கு திருமணமாகி சங்கீதா (42, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி இருந்தார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கமலேசன் கடந்த 2013ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கமலேசன் மனைவி சங்கீதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் (51) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதனிடையே, இவர்களது இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. அதன் பின்னர், இவர்கள் இருவரும் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சங்கீதா மற்றும் குப்பன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
இதனையடுத்து, சங்கீதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குப்பன், தான் செலவு செய்த ரூ.10 லட்சத்தை சங்கீதாவிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த குப்பன், நேற்று முன் தினம் (18-12-23) இரவு, சங்கீதாவின் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்றிருக்கிறார். அங்கு இருந்த சங்கீதாவிடம் மீண்டும் தான் செலவு செய்த பணத்தை கேட்டிருக்கிறார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சங்கீதா மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்ப முயன்றார்.
இதில், சங்கீதாவுக்கு தீ வைத்ததில் குப்பனுக்கு தீ காயம் ஏற்பட்டது. சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து தீயை அணைத்து சங்கீதா மற்றும் குப்பனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். குப்பன், அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குப்பனை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)