ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி. மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ்(55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள்(50). இன்று காலை கோபியில் உள்ள உறவினர் வீட்டுத்திருமணத்திற்குச் செல்வதற்காக சுந்தரராஜ், மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கிளம்பினார். சுந்தரராஜ் வண்டியை ஓட்ட பின்னால் பழனியம்மாள் அமர்ந்து வந்தார்.
அப்போது திங்களூர் - பெருந்துறை ரோட்டில்செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே இடது ஓரமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த்திசையில் வந்ததனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக சுந்தரராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுந்தரராஜ் மற்றும் பழனியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவர் உடலையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.