Skip to main content

“ஈரோட்டில் கோயம்பேடு மார்க்கெட்டைவிட பிரம்மாண்டமான மார்க்கெட்..” - அமைச்சர் முத்துசாமி தகவல்

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

"The market in Erode is bigger than the koyambedu market." - Minister Muthusamy

 

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளைப் பூர்த்தி செய்யும் பணிக்காக 9489092000 என்ற வாட்ஸ்-அப் எண் சேவையின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி புதிய வாட்ஸ் அப் எண் சேவையைத் தொடங்கிவைத்தார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறித்து தெரிவிக்க, புகார் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் புதிதாக வாட்ஸ் அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை வாட்ஸ் அப் மூலமாகவே தெரிவிக்கலாம். இந்தப் புகார் அந்தந்த அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாகச் செல்லும். ஒரு பிரச்சனைக்கு எவ்வளவு காலத்திற்குள் தீர்வு காண முடியும் என்று உறுதியாக கூற முடியாது. காரணம், சில புகார்களுக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணலாம். இன்னும் சில பிரச்சனைகள்  வாரங்கள்,  மாதங்கள் என காலம் பிடிக்கலாம்.

 

இனிமேல் எந்த ஒரு கட்டடத்தையும் விதிமுறைகளை மீறி கட்ட முடியாது என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம். ஒரு கட்டடம் விதிமுறைக்கு உட்பட்டுதான் கட்டப்படுகிறதா என்பதைப் பறக்கும் படை குழுக்கள் கண்காணிக்கும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழைய கட்டடத்தைப் பொறுத்தவரை நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதன் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம்.

 

சாயக்கழிவு நீர், நிலத்தடி நீர் மாசு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிகள் செய்துவருகிறோம். சோலார் பகுதியில் மிகப்பெரிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கையும், அதற்கான ஆய்வுப் பணியும் நடந்துவருகிறது. இது சம்பந்தமாக உயரதிகாரிகளும் பேசிவருகின்றனர். இதைப்போல் ஈரோட்டில் தமிழ்நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக மிக பிரம்மாண்டமாக ஒரு காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டைவிட பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகளுக்கான ஆய்வு நடந்துவருகிறது.

 

‘டெக்ஸ்டைல்ஸ் யுனிவர்சிட்டி’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் நீர்வழி புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். இதைத் தொடர்ந்து நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ. 30.85 கோடி மதிப்பில் புதிதாக கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் முத்துசாமி துவக்கிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்தும் பிறரை வாழுவைக்கும் இளைஞர்! ஈரோட்டில் நடந்த இரு நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Two people underwent kidney transplant today in Erode
முகமது அனிஷ்

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகராஜன் (21) என்ற வாலிபருக்கு, கடந்த 12ம் தேதி விபத்து ஏற்பட்டது.  அதில் படுகாயமடைந்த அவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு கடந்த 15ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, லோகராஜனின் பெற்றோர், லோகராஜனின் உடல் உறுப்புகள் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, லோகராஜனின் ஒரு சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 15 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டு, கடந்த 5 வருடங்களாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த முகமது அனிஷ்(29) என்பவருக்கு  சிறுநீரகம் பொருத்தப்பட்டது.  இதேபோல், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் தங்கராஜ்(58) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீராக  செயலிழப்பு ஏற்பட்டு  ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  தங்கராஜியின் மனைவி சரோஜா (52), சிறுநீரகத்தை அவரது கணவருக்கு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார். இதன்பேரில், சரோஜாவிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெறப்பட்டு, தங்கராஜிக்கு சிறுநீரகம் லேப்ரோஸ்கோப்பி மூலம் சிறிய துளை போடப்பட்டு, சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்து மாற்றப்பட்டது.

இந்தச் சிகிச்சைகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் ஆணைப்படி, ஒரே இரவில் இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சுமார் 12 மணி நேரம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சிறுநீரக சிறப்பு மருத்துவர் டி.சரவணன் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்பு நோயாளிகள் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் என டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.