சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, வழிகாட்டு நெறிமுறைகளோடு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி, இன்று முதல் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திறந்துவிடப்பட்ட மெரினாவிற்கு அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, விளையாட்டுப் பயிற்சி ஆகியவற்றிற்காக வந்து சென்றனர். பகல் வேளையில் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.