
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் கடந்த 80 வருடங்களுக்கு முன்பு காலரா நோய் பரவி பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அப்போது பொம்மையசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த வி.என்.ஆர்.வி.நாகப்ப செட்டியார் என்பவர் அம்மனை நினைத்து தை மாதம் முதல் தாங்கள் வருடந்தோறும் சந்து மாரியம்மன் கும்பிடுகிறோம், நீங்கள் எங்களை நோய்நொடியிலிருந்து காக்கவேண்டுமென கையெடுத்துக் கும்பிட்டு வழிபாடு செய்ததால் அன்று முதல் இன்று வரை 80 வருடங்களாக ஸ்ரீ சந்து மாரியம்மன் கும்பிடு விழாவை சின்னாளபட்டியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று 50க்கும் மேற்பட்ட தெருக்களில் ஸ்ரீ சந்து மாரியம்மன் கும்பிடு விழா நடைபெற்றது. அதிகாலை 7 மணி முதல் அம்மன் கரகம் எடுப்பதற்காக பக்தர்கள் சின்னாளபட்டி பிரிவில் உள்ள பிருந்தாவனத்தோப்பில் பக்கதர்கள் முளைப்பாரியுடன் குவிந்த வண்ணம் இருந்தனர். பின்னர் 10 மணியளவில் அம்மன் கரகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு தங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தனித்தனியாக முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் அம்மனை தங்கள் பகுதிக்கு அழைத்து வந்தனர். அம்மன் கரகம் அலங்கரிக்கப்படும் இடத்தில் ஆட்டோக்கள், ஐஸ்வண்டிகள், பலகார கடைகள், சிறிய ராட்டிண கடைகள், பேன்சி பொருட்கள் கடைகள், பழக்கடைகளை போட அனுமதித்து இருந்ததால் மாரியம்மன் கரகத்தை அலங்கரிக்க பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுபோல அம்மன் கரகம் வெளியேறும் சாலை பகுதியில் குறுக்கே ஆட்டோக்களை நிறுத்தி இருந்தால் அம்மன் கரகம் வெளியே வர முடியாமல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு சொல்லி போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர். அதன்பின்பு அம்மன் கரகத்தை பகுதி மக்கள் கோவிலுக்கு அழைத்து வந்தனர். நேற்று ஒரே நாளில் கலைஞர் காலனி, காந்திஜி நெசவாளர் காலனி, கலைமகள் காலனி, மேட்டுப்பட்டி, உட்பட 50 இடங்களில் சந்துமாரியம்மன் சாமி கும்பிடுவிழா நடைபெற்றதால் சின்னாளபட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதுபோல மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அம்மன் கரகத்தை அலங்கரிக்க கடைவீதி அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அங்குள்ள மண்டபத்தில் அம்மன் கரகத்தை அலங்காரம் செய்து தங்கள் பகுதிக்கு அழைத்து வந்தனர். மேட்டுப்பட்டி பகுதியில் கே.என்.பி.ஏ. தெரு, ராயல்சினிமா ரோடு பகுதி உட்பட பல இடங்களில் சந்து மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. அனைத்து தெருக்களிலும் மதியம் 12மணியளவில் பொதுப்பொங்கல் வைக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் ஒவ்வொரு தெருக்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது!