ADVERTISEMENT

“தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்” - கமல்ஹாசன் பேட்டி

12:45 PM Feb 28, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவின் வடசென்னை மாவட்டம் சார்பாக அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை பயணத்தை வெளிக்காட்டும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், ''ஸ்டாலினை வெறும் கலைஞர் மகன் ஸ்டாலின் என்ற காலத்திலிருந்து எனக்கு தெரியும். தெரியும் என்றால் நெருங்கிய நட்பு என்று சொல்ல முடியாது. ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை பலமுறை நாங்கள் இருவருமே நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறேன். முக்கியமாக குறிப்பு புத்தகத்தில் கூட நான் எழுதி வைத்திருப்பது என்னவென்றால் ஒரு மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக இருப்பதில் இருக்கும் சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும் சவால்களும் நிறைய உண்டு. எல்லா சந்தோஷத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று படிப்படியாக தொண்டனாக, இளைஞரணி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, இன்று தமிழகத்தின் முதல்வராக என்று படிப்படியாக உயர்வது என்பது அவருடைய பொறுமையை மட்டும் அல்ல திறமையையும் காட்டுகிறது.

பதற்றப்படாமல் இத்தனை ஆண்டுகள் படிப்படியாக கியூவில் நின்று வருவது போல் படிப்படியாக முன்னேறி இங்கே வந்து அடைந்திருக்கிறார். சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் சரித்திரத்தை மாற்றி எழுத சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதில் பெரிய ஆர்வம் காட்டும் பலர் இருக்கிறார்கள். அதற்கு சவால் விடுவது போல் நாம் நினைவு கூர்ந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நினைவு தான் இது. எப்பொழுதுமே சொல்வார்கள் நல்ல செய்தி தபாலில் வரும் கெட்ட செய்தி தந்தியில் வரும் என்று. இதெல்லாம் நல்ல செய்தி அதனால் இவற்றை தபால் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அடிக்கடி. அதைத்தான் செய்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'சார் இந்த நிகழ்வின் மூலம் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?'என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'கூட்டணி பேச வேண்டிய நேரம் இந்த நேரம் அல்ல. சீன் பை சீன் தான் கதையை நகர்த்த வேண்டும். கிளைமாக்ஸ் என்னவென்று இப்பொழுதே கேட்கக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு இதுதான் பொருத்தமான விஷயமாக இருக்கும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT