Advertisment

இன்னும் பல உண்மைகள் அணிவகுக்கின்றன... அடிமை ஆட்சியாளர்களிடம்  என்ன பதில் உள்ளது?  ஸ்டாலின்

ss

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதம்:

’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க மடல்.

Advertisment

எதிலுமே மரபுகளுக்கு மாறாக, சட்டவிதிகளுக்குப் புறம்பாக, ஆட்சிப் பொறுப்பின் பரிமாணங்களையும் பலவாறான உரிமைகளையும் உணராமல் ஏனோதானோவெனச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் பேரவைக் கூட்டத் தொடர் என்பது சட்டமன்ற ஜனநாயகம் பாரம்பரியமாக வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்குக்கூட அனுமதி இல்லாத வாய்ப்பூட்டு நிகழ்வாகவே சடங்குக்காகத் தொடர்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மாதக்கணக்கில் இடைவெளிவிட்டு அதன்பின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் பெயரளவுக்கு நடைபெற்றுள்ளன.

Advertisment

ஒவ்வொரு நாளும் பேரவையில் நேரமில்லாத நேரத்தில் (ஜீரோ ஹவர்) மாநிலத்தின் பொதுவான அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அவ்வப்போது அளிக்க வேண்டியது ஆளுந்தரப்பின் கடமை. ஆனால், இந்தப் பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்து வைத்த வாதங்களுக்கு முழுமையான அனுமதி கிடைக்காதது மட்டுமல்ல, வாதங்களை நெய்த உயிரோட்டமான வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், கேள்விகளுக்குரிய நியாயமான பதில்களும் கிடைக்கவில்லை. ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுவதைக் கண்டித்தும் அதனை அவையிலே பதிவு செய்ய வேண்டியது கடமை என்ற உணர்வோடும், தி.மு.கழகமும் தோழமைக் கட்சியினரும் வெளிநடப்பு செய்து, ஆரவாரமில்லாத எதிர்ப்பினைப் பதிவு செய்தோம். பின்னர் மீண்டும் அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையினைத் தொடர்ந்து ஆற்றுகிற செயலையும் மேற்கொண்டோம்.

தி.மு.கழகம் வெளிநடப்பு செய்வது மட்டுமே ஊடகங்கள் வாயிலாக வெளியே தெரிகின்றன. எப்போது பார்த்தாலும் இவர்கள் வெளியே வந்துவிடுகிறார்களே, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதில்லையா என பொதுமக்களிடம் ஒரு தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருக்காலும் நடக்காது என உறுதியாக நம்புகிறேன். அதேநேரத்தில், உண்மை நிலவரத்தை நடுநிலையாளர்கள், கழகத் தோழர்கள் - தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் கழகம் முன்வைத்த முக்கிய பிரச்சினைகள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி தொடர் போராட்டத்தின் நூறாவது நாளான மே 22அன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் பங்கேற்ற பேரணி மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தி 13 உயிர்களைப் பதறப் பதறப் பறித்து, பல நூறு பேரை காயப்படுத்தி, தமிழ்நாட்டில் ஒரு “ஜாலியன்வாலாபாக்”கை உருவாக்கிய எடப்பாடி பழனிசாமி அரசின் மக்கள் விரோதப் போக்கை சட்டமன்றத்தில் எடுத்துரைக்கக் கழகம் தவறவில்லை.

ஜூன் 6ந் தேதி பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், தூத்துக்குடியில் கலவரக்காரர்கள் புகுந்ததாக முதல்வர் தெரிவித்த நிலையில், என்னுடைய உரையில் இடம்பெற்ற சில விபரங்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

யார் யாரெல்லாம் தடிகளை, கொம்புகளை, உருட்டுக் கட்டைகளை எல்லாம் எடுத்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள், புகைப்படம் எல்லாம் இருப்பதாக அவரே (முதல்வர்) தெரிவித்தார். காவல்துறையினர் “மஃப்டி”யில் வேனின் மீது படுத்துக் கொண்டு, குறிபார்த்துச் சுடக்கூடிய கொடுங்காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வந்திருக்கின்றன, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவைகளும் முதலமைச்சரின் கவனத்துக்கு வந்திருக்குமென்று நான் கருதுகிறேன். ஆகவே நான் கேட்க விரும்புவது, இதே அவையில் நீட் தேர்வுக்காக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்த நேரத்தில், நீதிமன்றத்தில் பிரச்சினை இருந்தபோது, இந்த அவையில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆலையை மூடுவோம் என்று அழுத்தம் திருத்தமாக நீங்கள் சொல்கிறீர்கள். சீல் வைக்கப்பட்டிருக்கிறது, திறக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால், அவர்கள் நீதிமன்றம் போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற சூழ்நிலையில், சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் காரணத்தால், நிரந்தரமாக மூடுவோம் என்ற நிலையில், இந்தப் பிரச்சினையை சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்து, நிறைவேற்றித் தருவதற்கு இந்த அரசு முன்வருமா?

சட்டமன்றத்தில் அதை தீர்மானமாக கொண்டு வந்தால், சட்டப்படி நீதிமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பை அவர்கள் இழந்து விடுகிறார்கள்.

தி.மு.க. ஆட்சியிலும் நீதிமன்றத்துக்குச் சென்று அவர்கள் தடை பெற்று இருக்கிறார்கள். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சியிலும் தடைபெற்று வந்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிரச்சினை மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே, எதிர்க் கட்சியின் கடமை என்ற நிலையில், இங்கு அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும், துப்பாக்கிச் சூடுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியான இந்த வாதங்களை கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எடுத்துரைத்ததுடன், பாதிக்கப்பட்ட - உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை, ஸ்டெர்லைட்டிலிருந்து அரசு பெற்றுள்ள அபாரதத் தொகை மூலம் வழங்க வேண்டும் என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டினேன். எடப்பாடி அரசு எதற்குமே செவி சாய்க்கவில்லை. ஸ்டெர்லைட் பிரச்சினையில் கழகத்தின் கருத்துகள் பலவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதால், பேரவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்ய வேண்டியதாயிற்று

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து அவர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக்கும் “நீட்” தேர்வு விவகாரத்தில் மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அடிமை ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஆண்டுதோறும் மாணவியர் உயிரிழப்பு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி 5-6-2018 அன்று பேரவையில் உரையாற்றினேன்.

நீட் தேர்வினால் கடந்த ஆண்டு அனிதாவை அநியாயமாக இழந்தோம். இந்த ஆண்டு, தமிழ் வழியில் தேர்வெழுதிய பிரதீபாவை இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோமோ புரியவில்லை.

தமிழ்மொழியில் கேட்கப்பட்டிருந்த நீட் வினாத்தாள் மோசமான பிழைகளுடன் இருந்ததை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டி, அதை ஈடுகட்டும் வகையில் உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும், சி.பி.எஸ்.இ. அலட்சியத்தால் மாணவர்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது, என்று ஆதாரங்களோடு எடுத்து வைத்தும் கூட, மத்தியில் இருக்கக்கூடிய அரசு அதைக் கண்டுகொள்ளவோ, கணக்கில் எடுத்துக்கொள்ளவோ இல்லை. தமிழ்மொழி என்றால் மத்திய அரசு தொடர்ந்து காட்டி வரக்கூடிய மாற்றாந்தாய் மனப்பான்மையை மீண்டும் நிரூபிப்பதாக இந்த நிகழ்வுகள் எல்லாம் அமைந்திருக்கின்றன.

ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று, இதே அவையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து, கடந்த 01.02.2017 அன்று நாம் ஒருமனதாக இரு மசோதாக்களை நிறைவேற்றி, மேதகு குடியரசு தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தோம். அந்த மசோதாக்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. அந்த மசோதாக்களுக்கு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற, மத்திய அரசுக்குத் தீவிரமான அழுத்தத்தை இந்த அரசு உடனடியாகத் தந்தாக வேண்டும். எனவே, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அழுத்தம் திருத்தமாகக் கேட்டு அமைகிறேன் என்று வலியுறுத்தினேன்.

மத்திய அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளால் பெட்ரோல் - டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே போகும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவற்றின் விலையைக் குறைக்க, கேரள அரசுபோல முயற்சி எடுக்க வேண்டும் என்பதை, முந்தைய கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்த நடவடிக்கையுடன் ஒப்பிட்டு 6-6-2018 அன்று சட்டமன்றத்தில் பதிவிட்டேன்.

கடந்த காலத்தில் இதே போன்றதொரு நிலைமை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்டது உண்மை. அப்போதெல்லாம் ஆட்சியில் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்று சொன்னால், உதாரணத்திற்கு 2006 இல் டீசல் மீது

1.67 சதவீத விற்பனை வரி குறைக்கப்பட்டது. 2008 இல் டீசல் மீது இருந்த 2 சதவீத விற்பனை வரியை குறைத்திருக்கிறோம். 2011 இல் பெட்ரோல் மீது 3 சதவீத விற்பனை வரியை குறைத்து இருக்கிறோம். ஆகவே, பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் குறைத்து மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் இந்தக் கடுமையான சுமையை ஓரளவாவது குறைக்க வேண்டுமென இந்த அரசை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று பெட்ரோல் - டீசல் விலை குறைப்புக்கான வாதங்களை முன்வைத்தேன்.

தி.மு.கழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த எந்தக் கோரிக்கைக்கும், எழுப்பிய எந்த வினாக்களுக்கும், மக்கள் நலன்மீது அக்கறை காட்டும் வகையிலான எந்த அறிவிப்போ பதிலோ ஆட்சியாளர்களிடமிருந்து வெளிவரவில்லை. அழுத்தமான - திடமான முடிவுகளை எடுக்காமல், எதிர்க்கட்சிகளின் கருத்துரிமையைப் பறிக்கும் செயல் மட்டுமே பேரவையில் மேற்கொள்ளப்பட்டன.

சட்டமன்றத்திலேயே ஜனநாயகமும் கருத்துரிமையும் இந்தப்பாடு படும்போது மக்கள் மன்றத்தில் அவற்றின் நிலைமை என்ன என்பதற்கு ஊடகங்கள் மீதான அ.தி.மு.க. அரசின் பாய்ச்சலைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதனையும், பேரவையில் நடந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் 11-06-2018 அன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து எடுத்துரைத்தேன்.

கோவையிலே “புதிய தலைமுறை” தொலைக்காட்சியைச் சார்ந்தவர்கள் ஒரு வட்ட மேசை விவாதத்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த விவாதத்திலே பங்கேற்ற, குறிப்பாக இயக்குனர் அமீர் மீது, அதேபோல, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட வழக்குப் பதிவு செய்யப்படக்கூடிய இந்த நோக்கத்தைப் பார்க்கிற போது, பத்திரிகைச் சுதந்திரத்தினுடைய குரல் வளையை நெறிப்பது போல அமைந்திருக்கிறது.

பி.ஜே.பி.யைச் சார்ந்து இருக்கக்கூடிய தலைவர்கள், அந்த கட்சியின் சார்பிலே பங்கேற்கக் கூடிய தோழர்கள் எல்லாம் கடுமையான அளவிற்கு மற்ற கட்சியினுடைய தலைவர்களை எல்லாம் விமர்சனம் செய்து, தொலைக்காட்சி விவாதத்திலே பேசுவது உண்டு. ஆனால், அவர்கள் மீதெல்லாம் எந்த நடவடிக்கையும் இந்த அரசு இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும், திரைப்பட இயக்குனர் அமீர் மீதும், வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

கோவை காவல்துறையை சார்ந்து இருக்கக்கூடியவர்கள் இப்படிப்பட்ட வழக்குகளை எல்லாம் போட்டிருக்கிறார்கள். காவல்துறை என்பது முதலமைச்சர் கட்டுப்பாட்டிலே இருக்கிறது. எனவே, நான் இந்த அவையின் மூலமாக முதலமைச்சரை கேட்டுக்கொள்ள விரும்புவது, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும், திரைப்பட இயக்குனர் அமீர் மீதும் போடப்பட்டிருக்கக் கூடிய வழக்குகளை உடனடியாகத் திரும்ப பெற்றுக் கொண்டு, பத்திரிகைச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்கக் கூடிய செயலை தடுத்திட வேண்டும் - என வலியுறுத்திப் பேசினேன்.

கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது போலவே, அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, “ஜாக்டோ-ஜியோ” அமைப்பினரின் போராட்ட நோக்கங்களை சட்டப்பேரவையில் 12-6-2018 அன்று எடுத்துரைத்தேன்.

நியாயத்திற்குக் குரல் கொடுப்பவர்கள் மீது சட்டத்தைப் பாய்ச்சுகிற அரசாங்கத்தினர், மனம்போன போக்கில் செயல்பட்டு, ஊடகத்தில் பணியாற்றும் பெண்கள் மீது அவதூறு பரப்பி, வழக்குப் பதிவான முன்னாள் எம்.எல்.ஏவும், நடிகரும், தலைமைச்செயலாளரின் உறவினருமான எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்பதையும் சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியது திராவிட முன்னேற்றக் கழகம்.

(இன்னும் பல உண்மைகள் அணிவகுக்கின்றன... சட்டமன்றத்தில் கழகம் முன் வைத்த கேள்விகள் தொடர்கின்றன.. அடிமை ஆட்சியாளர்களிடம் என்ன பதில் உள்ளது? நாளையும் பார்க்கலாம்)’’

letter m.k.stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe