Many lakhs of people are obsessed with showing government job ..! Police arrested two!

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகில் உள்ள கணேச நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் காந்தி என்கிற தனசேகரன். இவர், அவரது உறவினர் முறையான சகோதரி, அரசு அலுவலகத்தில் உயர் பதவியில் உள்ளதாகவும், அவர் மூலம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி சந்தீப் ராமன் என்பவர் உட்பட சுமார் 9 பேரிடம் 40 லட்சம் பணத்தை தனசேகர் பெற்றுக் கொண்டு போலியாக பணி நியமன உத்தரவை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

பணி நியமன ஆணை போலியானது என்பதை அறிந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதற்கு தனசேகரன் மற்றும் நவீன்குமார் என்பவர்கள் அசிங்கமாக திட்டி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சந்தீப் ராமன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது புகார் ஏற்று வழக்குப்பதிவு செய்து தனசேகரனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisment

அதேபோன்று சென்னை, பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சாம்பசிவம் என்பவர், தனக்கு தெரிந்தவர் சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி செய்து வருவதாகவும், அவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி விழுப்புரம் விராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் உள்பட 6 பேரிடம் 16 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முரளி கிருஷ்ணன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சாம்பசிவத்தை கைது செய்தனர். இவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.