Skip to main content

“போராக மாற்ற பலரும் முயல்கின்றனர்” - திருமாவளவன் எம்.பி.

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

"Many are trying to turn it into a conflict Thirumavalavan MP

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அனைத்து முயற்சிகளையும், இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இருப்பினும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர். அதே நேரத்தில், ஜம்முவின் 7வது படைப் பிரிவைச் சேர்ந்த 8 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் 300 இருந்து 400 ட்ரோன்கள் அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதில் சில ட்ரோன்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை எனவும், அதனை இந்திய ராணுவம் அழித்து முறியடித்ததாகவும், லெப்டினன்ட் கர்னம்ல் சோஃபியா குரேஷி இன்று (09-05-25) தகவல் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதனை போராக மாற்ற பலரும் முயற்சித்து வருவதாக விசிக தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. இஸ்லாமியர்களும் இந்தியர்கள்தான், இந்த மண்ணின் மைந்தர்கள்தான். அவர்களுக்கு எதிரான வெறுப்பை திட்டமிட்டு பரப்புவது ஏற்புடையது அல்ல. இஸ்லாமியர்களும் இணைந்தே இந்திய அரசின் தாக்குதலை வரவேற்கின்றனர். ஆகவே இந்தியாவை பொறுத்தவரை மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது. பிரிவினைக் கூடாது என்று வேண்டுகோள் வைக்கிறோம். 

போர் வேண்டாம் என்பதுதான் ஜனநாயக சக்திகளின் கோரிக்கை. பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்பது வேறு இரண்டு நாடுகளுக்கு எதிரான தாக்குதல் என்பது வேறு. இதனை இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாற்ற பலரும் முயல்கிறார்கள். அதற்காக தவறான செய்திகளை பரப்புகிறார்கள். பயங்கரவாதத்தை கண்டறிந்து அவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை அழிப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதனால் இது இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்