திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும்பாறைப்பட்டி, வண்ணம் பட்டி, சீவல்சரகு, கசவனம்பட்டி, தர்மத்துப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து பல ஏக்கருக்கு மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மழை பொய்த்துப் போனதாலும் நோய் தாக்குதல் ஏற்பட்டதாலும்மக்காச்சோள செடிகள் கருகி போயின. சோளக் கதிர்கள் முளைப்பதற்கு முன்பே கருகியதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது காலம் தவறி பெய்துவரும் மழை காரணமாக வளர்ந்த சோளத் தட்டைகளில் கசப்புத் தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டுத்தீவனத்திற்குக்கூட பயன்படுத்தாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் மக்காச்சோளம் மற்றும் வெள்ளை சோளம் கருகி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை திமுக ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
அதன்பின் விவசாயிகளின் குறைகளையும் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, மானாவாரி சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து இருப்பதாகவும், ஏற்கனவே அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கி மக்காச்சோளப் பயிர்கள் சேதமடைந்த நஷ்டத்தில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது இப்பகுதி மானாவாரி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும்தமிழக அரசு இந்த நிலங்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதற்காக மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன் என்று கூறினார்.