Manusmriti issue: Case for disqualification of Thirumavalavan was dismissed!

மனுஸ்மிருதி பற்றி பேசி நாட்டில் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த செப்டம்பர் மாதம், ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொளிக் கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி, பெண்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மனுஸ்மிருதியை தடைசெய்யக் கோரி, திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். தனது சொந்த அரசியல் லாபத்துக்காக இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, நாடாளுமன்றசெயலாளருக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது. இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்கக் கூடாது. அவரது சர்ச்சை பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசி வருகிறார். இதன் மூலம், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ‘பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாடாளுமன்ற செயலாளருக்கு அக்டோபர் 27-ல் மனு அளித்தோம். அதைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்.’ என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது. மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் இல்லை. மனுஸ்மிரிதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா? என்பது தெரியாது.’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

cnc

மனுதாரர் தரப்பில், எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், உரிய அரசியல் சட்ட பிரிவுகளைக் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.