Advertisment

பட்டுநூல் விலையேற்றம்; சேலத்தில் வெண்பட்டு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்! 

Manufacturers on strike in Salem

பட்டுநூல் விலை தாறுமாறாக உயர்ந்ததை கண்டித்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் சேலத்தில் வெண்பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Advertisment

வெண்பட்டு ஜவுளி உற்பத்தியில் சேலம் மாவட்டம் தனித்து விளங்குகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் சேலம் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, வலசையூர், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெண்பட்டு கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் வெண்பட்டுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் வெண்பட்டு நூல் விலை உயர்வால், கடந்த ஒரு மாதமாகவே நெசவாளர்களுக்கு போதிய நூல் கிடைக்காமல் தடுமாறி வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் பட்டு நூல் தேவையை 40 சதவீதம் சீனாவும், மீதமுள்ள 60 சதவீத தேவையை கர்நாடகா, ஆந்திரா, தமிழகமும் பூர்த்தி செய்கின்றன. கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஒரு கிலோ பட்டுநூல் 2700 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது 75 சதவீதம் விலை உயர்ந்து, கிலோ 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்தும், விலையை குறைக்கக்கோரியும் சேலத்தில் வெண்பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் பிப். 21ம் தேதி (திங்கள்கிழமை) முதல் வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து 5 நாள்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெண்பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம் உள்ளிட்ட பட்டு உற்பத்திகள் முடங்கியுள்ளன.

இது தொடர்பாக வெண்பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகையில், ''சேலத்தில் அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். பட்டுநூல் விலை உயர்வை கண்டித்து கைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கைத்தறி நெசவாளர்கள், உப தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விலை உயர்வால் ஜவுளி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெண்பட்டு வேஷ்டி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பட்டுநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe