'Mantus' storm warning; Cancellation of various exams

Advertisment

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் சென்னையிலிருந்து320கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு புயல் எச்சரிக்கை தொடர்பாக பட்டுப்போன மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனப்பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளுவர், அண்ணாமலை, பாரதிதாசன், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாலிடெக்னிக் தேர்வுகளும்புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 16ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத்திறனாய்வு தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் வருவதை தவிர்க்கும் படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகில் இருக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.