Skip to main content

கரையைக் கடக்கத் தொடங்கிய மாண்டஸ் புயல்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

jlk

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 90 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது இன்று இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 3 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்நிலையில் கடந்த 4 மணி நேரமாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி பாதை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மாமல்லபுரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கடல் அலைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வீசி வருகிறது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

 

இன்னும் சில மணி நேரங்களில் புயல் முழுவதும் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்னும் அதிக அளவு கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குறைந்த தண்ணீர் வரத்து - செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு குறைப்பு

Published on 13/12/2022 | Edited on 14/12/2022

 

j

 

மாண்டஸ் புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் வட தமிழகத்தில் அதிகப்படியான மழை பதிவானது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தொடர் நீர்வரத்தால் 22.35 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்ற நிலையில் வினாடிக்கு 1,036 கனஅடி நீர் வரும் நிலையில், இன்று காலை 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு 300 கனஅடியாக குறைந்துள்ளது.

 

இருந்தாலும் தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் தாலுகாவில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பள்ளி தலைமையாசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
 

 

Next Story

மாண்டஸ் எஃபெக்ட்; ஒரே நாளில் எகிறிய தக்காளி விலை

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

cyclone effect;Pickled tomato price

 

'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை கோயம்பேட்டில் நேற்று காய்கறிகளின் விலை 30 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால், வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை மட்டும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறிகள் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை சரிந்து வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், 'மாண்டஸ்' புயல் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை நேற்று 30 சதவீதம் உயர்ந்து. நேற்று பீன்ஸ் கிலோ 30 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும், கேரட் விலை கிலோ 35 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் உயர்ந்தது. கத்திரிக்காய் கிலோ 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும், பாகற்காய் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

நேற்று முன்தினம் கிலோ 12 ரூபாய்க்கு தக்காளி விற்பனையான நிலையில் நேற்று கிலோ 18 ரூபாய்க்கு தக்காளி விற்பனையானது. இந்நிலையில், இன்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் நேற்றைய விலையை விட 5 சதவிகிதம் உயர்ந்து விற்பனையாகிறது.