திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வட பழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், ''என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைந்திருந்த நண்பர் நடிகர், டைரக்டர் மனோபாலா அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும் பின்னர் டைரக்டர் பாரதிராஜா அவர்களிடம் உதவியாளராகவும் பணிபுரிந்து, பின் நாட்களில் தானே சொந்தமாக டைரக்ட் செய்ய ஆரம்பித்த நேரத்தில் எல்லா காலங்களிலும் என்னைச் சந்தித்து வந்தவர்.
என்னைப் பார்ப்பதற்காக நான் வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பிரிட்ஜை தாண்டுகின்ற நேரத்தில் எத்தனை மணிக்கு என்னுடைய கார் பிரிட்ஜை தாண்டுகிறது என்ற நேரத்தை பார்த்து அதே நேரத்தில் என்னை காரில் பார்ப்பதற்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோபாலாவும் ஒருவர். அப்படியே இருந்தாலும் பின் நாட்களில் நடிகரானாலும் என்னிடம் வந்து அப்போதைக்கு அப்போது நடந்த விஷயங்களை எல்லாம் சொல்வார். சினிமா உலகத்தில் அதிகமாக என்னுடைய ரெக்கார்டிங் டைமில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவர் மனோபாலா'' எனத் தெரிவித்துள்ளார்.