
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கதிரவன் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவர் விஜயலட்சுமி மருத்துவமனையில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும், தற்பொழுது நோயாளிகளுக்கான படுக்கை 30 மட்டுமே உள்ளதால் இதனை விரிவுபடுத்தி 50 பேருக்கான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், "மருத்துவமனையில் போதுமான இடவசதி உள்ளதோடு, போதுமான மருத்துவர்களும் உள்ளனர். ஆனால், விபத்து மற்றும் உயர் சிகிச்சை என்றால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கோ அல்லது திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. நம்முடைய மருத்துவனையில் போதிய உபகரணங்களும் படுக்கை வசதிகளும் இருந்தால் விபத்து மற்றும் உயர் சிகிச்சையும் வழங்க முடியும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து எம்எல்ஏ கதிரவன் முதலமைச்சரிடம் தெரியப்படுத்தி மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.