Skip to main content

“தமிழ்நாடு அரசு ஊசலாட்டமின்றி உறுதியுடன் பேரறிவாளன் விடுதலைக்கு உண்மையாக வாதிட்டது” - பெ.மணியரசன் பாராட்டு

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Maniyarasan comment on perarivalan release

 

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு குறித்து தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துகள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியிருப்பதாவது; “பேரறிவாளனின் 31 ஆண்டு கால இளமையைத் தின்றுவிட்டு, இப்போது விடுதலைத் தீர்ப்பு வந்துள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்து 18.05.2022 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேசுவரராவ் மற்றும் ஜி.ஆர். கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயன்படும் வகையில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-க்குத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள். ஆளுநர்கள் விருப்பு வெறுப்பு அடிப்படையில் எதேச்சாதிகாரிகளாகச் செயல்படுவதற்கு வரம்பு கட்டியிருக்கிறார்கள். அவ்விரு நீதிபதிகளுக்கும் பாராட்டுகள்! 

 

நீதிபதிகளின் நீதி சார்ந்த தனி அக்கறைகளும் சார்பற்ற அணுகுமுறையும் பல முற்போக்குத் தீர்ப்புகளுக்கு அடித்தளமாக இருந்துள்ளன. அளவுக்கு அதிகமாகப் பேரறிவாளன் தண்டனை அனுபவித்துவிட்டார், சிறையில் நன்னடத்தைப் பண்புகளைக் கொண்டிருந்தார் என்ற சிறப்புக் கூறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், மாநில அரசுக்கும், ஆளுநர்க்கும் இருக்க வேண்டிய செயல் உறவு பற்றிய அரசமைப்புச் சட்ட விளக்கத்தையும் இத்தீர்ப்பில் கூறியுள்ளார்கள். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ன் கீழ் தமிழ்நாடு அமைச்சரவை பேரறிவாளன் உட்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து, ஆளுநர்க்கு 2018 செப்டம்பரில் அனுப்பிய பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதை ஏற்காமல் கிடப்பில் போட்டதும், பின்னர் குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்பியதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டவிரோதச் செயல் (Constitutionally illegal) என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.


இது மிக முக்கியமான முடிவு. ஆனால் ஒவ்வொரு நீதிபதிக்கும், அரசமைப்புச் சட்ட விளக்கங்கள் மாறுபடுவதையும் பார்க்கிறோம். அடுத்து, நரேந்திர மோடி அரசு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கூடாது என்று மூர்க்கமாக, முரட்டுத்தனமாகக் கடைசிவரை வாதிட்டது. எழுத்து வடிவில் கடைசியாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் 11.5.2022 அன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க கொடுத்த பதிலுரையிலும் நரேந்திர மோடி அரசு, பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது, உச்ச நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என்றே கூறியிருந்தது.

 
பா.ஜ.க. வலியுறுத்தும் இந்துத்துவ “தர்மம்” எப்படிப்பட்ட பாகுபாட்டுத் தர்மம் என்பதையே மோடி அரசின் இந்த முரட்டு அணுகுமுறை வெளிப்படுத்துகிறது. ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்பதிலும், அரசமைப்பு உறுப்பு 161-ஐ தவறாகப் பயன்படுத்துவதிலும் காங்கிரஸ் ஆட்சிக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கும் ஒற்றுமையே நிலவுகிறது. 


பேரறிவாளன் சார்பில் விடாமல் தொடர்ச்சியாக சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன் மற்றும் பிரபு சுப்பிரமணியன், பாரி ஆகியோர் தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டுக்குரியவர்கள். பேரறிவாளனின் அம்மையார் அற்புதம் அம்மாளின் அக்கறையும், அயரா உழைப்பும் உலக அற்புதம். தமிழ்நாடு அரசு ஊசலாட்டமின்றி உறுதியுடன் பேரறிவாளன் விடுதலைக்கு உண்மையாக வாதிட்டது. அதற்குப் பாராட்டுகள். இவ்வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு தனி சட்ட முயற்சி எடுத்து, சிறை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பேரறிவாளன் (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான, சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடலைக் காண நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்