Advertisment

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! பெ. மணியரசன்

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை!

கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமென்று பலவாறாக வர்ணிக்கும் தீர்ப்புரை, தமிழ்நாட்டின் நீர்த் தேவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை! எடுத்துக்காட்டாக, பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது, அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரை வழங்குவதே சரி என்று காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் முழு பெங்களூருவுக்கும் காவிரித் தண்ணீர் தேவை என்றும், பெங்களூரு உலக நகரம் என்றும் கூறி, அதற்கான கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து 14.75 ஆ.மி.க.வை எடுத்து வழங்கியிருக்கிறது!

Advertisment

இந்த 14.75 ஆ.மி.க.வில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கக் கூடிய 20 ஆ.மி.க. நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க.வை எடுத்துக் கொடுக்கிறோம் என்று தீர்ப்புரை கூறுகிறது. அந்த 10 ஆ.மி.க.வையும் கர்நாடகம் தர வேண்டிய 192இல் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. அத்துடன், பெங்களூரு “உலக நகரம்” என்று கூறி, மேலும் 4.75 ஆ.மி.க. தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டிய நீரிலிருந்து கொடுக்கிறது.

maniyarasan

பெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை? பெங்களூருவைவிட தொழில் துறையிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமாகவும், பன்னாட்டுத் தொழிலகங்கள் நிறைந்த நகரமாகவும் சென்னை இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை மாநகருக்குக் குடிநீரைக் கூடுதலாக ஒதுக்க உச்ச நீதிமன்றம் அக்கறைப்படாதது ஏன்?

அடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது! பாகுபாடான அணுகுமுறை!

உண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 – 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!

இவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A – தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த – அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.

இதிலிருந்து இந்திய அரசின் – பா.ச.க.வின் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான வஞ்சக நெஞ்சம் தெரிய வருகிறது! ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது.

அதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது! காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம்! எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்!

அதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன்? இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது! இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்?

காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன? காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு! இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன.

ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.

உச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான்! உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பதுதான் “தேசிய நீர்க் கொள்கை”!

புதிய வரைவு நிலையில் 2012இலிருந்து இருக்கும் “தேசிய நீர்க் கொள்கை”யை உச்ச நீதிமன்ற அமர்வு, சட்டம்போல் எடுத்துக் கொண்டு அதை முதன்மைப்படுத்தி தீர்ப்புரையில் கூறுவதன் மர்மம் இதுதான்!

எந்த வகையில் பார்த்தாலும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது! மனச்சான்று அற்றது! கட்டப்பஞ்சாயத்துத் தன்மையுள்ளது! கடைசியில், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவிரியை ஒப்படைக்கும் தன்மையுள்ளது! எனவே, இந்த இழப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க காவிரி வழக்கை – ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல் முறையீடாக நாம் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை! ஒன்றிய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிக்கலாக உள்ளது. மேலும், தகுந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து, காவிரி வழக்கை விசாரித்துத் தீர்ப்புரைக்க உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வை உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை உரியவாறு அணுக வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதேவேளை, அரசமைப்பு அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

maniyarasan Cauvery case Supreme Court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe