Skip to main content

 ’மாட்டுக்கு - ஆட்டுக்கு சோறூட்டுவோம்;ஊரே சேர்ந்து இதைக் கொண்டாடும்! ’- லண்டன் தமிழர் திருநாளில் பெ. மணியரசன் பேச்சு!

l


பிரித்தானியாவின் தலைநகர் இலண்டன் மாநகரில் அகேனம் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் தமிழர் திருநாள் - பொங்கல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்  இலண்டன் பயணம் மேற் கொண்டுள்ளார்.  

இலண்டனில் நூற்றுக்கும் மேற்பட்ட மண் பானையுடன் ஊர்கூடி பொங்கும் பிரம்மாண்ட தை பொங்கல் பெருவிழாவை அகேனம் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்தனர். 

 

13.01.2019 அன்று இலண்டனின் மேற்குப் பகுதியிலுள்ள அவுஸ்லோ நகரின் பெல்தம்  பகுதியின் நக்சத்திரா அரங்கில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு - தமிழர் திருநாள் விழாவில்  பெ. மணியரசன்  பங்கேற்றார்.

   அங்குள்ள பெரும் திடலில் பறையிசை முழங்க, தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக பொங்கல் வைத்து உற்சாகப் பெருக்கோடு பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடினர். ஆடல், பாடல், கருவி இசை, நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்ப் பிள்ளைகள் சிறப்புடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 

 

lo

 

பின்னர் நடைபெற்ற வாழ்த்தரங்கில் பேசிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்  உரை :

“அகேனம் அறக்கட்டளை சார்பில், இங்கு நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் மகளிரும், ஆடவரும் மண் பானையில் பொங்கலிட்டக் காட்சி என்றும் என் மனத்தைவிட்டு அகலாது! இந்நிகழ்வில், பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு அகேனம் அறக்கட்டளை பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

இப்படிச் சிலர் முன்முயற்சி எடுப்பதால்தான், நம்முடைய இனத்தின் வரலாறு, மரபு, பெருமிதங்கள் மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதரவளித்து இவ்விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழர்களே என்ற உண்மையை தமிழ் மக்கள் நிலைநாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு, உலகத் தமிழர்கள் நெஞ்சார மகிழ்வார்கள்!


இந்நாள் மட்டுமின்றி, இனிவரும் தைத்திங்கள் முதல் நாளான சனவரி 15 அன்றும் அவரவர் வீடுகளில் பொங்கல் வைப்போம் என்று இங்கே கூறினார்கள். அதுவும் தேவை! அனைவரும் சேர்ந்து வைத்த இப்பொங்கல் திருவிழா பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

 

l

 

நம்முடைய சான்றோர்கள் - முன்னோர்கள் நமக்கு எல்லா வகையிலும் வாழ்வியலைக் கற்றுக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். தை முதல் நாள், இரண்டாம் நாள் எனத் தொடரும் நான்கு நாள் விழாக்கள் நம் வசந்த காலத் தொடக்கமாக இருக்கிறது. அந்த விழா நாட்களில் மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடை களுக்கும் பொங்கல் விழா! கால்நடைகளைப் போற்றுகிறது தமிழினம்!

 

கலித்தொகையில் ஏறுதழுவல் பற்றிக் குறிப்புகள் உள்ளன. ஸ்பெயின் நாட்டில் காளையோடு சண்டையிடுகிறார்கள். ஆனால், நாம் காளையை கட்டித் தழுவுகின்றோம். அதைப் புண்படுத்தவில்லை; விளையாடுகிறோம்! அதனால்தான் ஏறுதழுவுதல் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். அப்படி யாராவது துன்புறுத்தினால், அது மரபை மீறிய தவறு!

 

எங்கள் கிராமங்களில் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் விழாக்கள் தான் மிகவம் களிப்புக்குரிய நாட்களாக இருந்தன. இரண்டாம் நாளன்று மாடுகளைக் குளிப்பாட்டுவோம். வீட்டுக்கு 10 மாடுகள் - 20 மாடுகள்  இருக்கும். சில வீடுகளில் 50 - 60 மாடுகள் இருக்கும். அவற்றையெல்லாம் ஏரிகளில் நீந்த வைப்போம். பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். வாசலிலே பொங்கல் வைத்து, மாட்டுக்கு - ஆட்டுக்கு சோறூட்டுவோம். ஊரே சேர்ந்து இதைக் கொண்டாடும்! 

 

மறுநாள், பாய்ச்சல் காளைகளை தழுவுவதற்கு இளைஞர்கள் காத்திருப்பார்கள். காணும் பொங்கல் அது! அன்றுதான் எங்கள் கிராமங்களில் அனைவரும் புத்தாடைகள் உடுத்திக் கொள்வார்கள். காளைகளை மட்டுமின்றி, பசுக்கள், எருதுகள் அனைத்தையும் தொழுவில் கட்டித் திறந்து விடுவோம். அவற்றின் தலையிலும், கழுத்திலும் கற்றாழை நார் சல்லி, கரும்புத் துண்டு ஆகியவை கட்டப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரிசையாகத் திறந்துவிடப்படும். அந்த ஒவ்வொரு வீட்டிற்கும் ஊர் மக்களெல்லாம் கூடிச் செல்வர். பெரிய திருவிழா போல் இது நடக்கும். 

 

தை மாதப் பிறப்பு என்பது, வசந்த காலத்தின் பிறப்பு. மார்கழி கடைசி நாள் போகியல்! அடைமழைப் போய் பசுமைப் போர்த்திக் கொண்டு “தை” பிறக்கும். அறுவடைப் பலன்களைக் கண்டு,  மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் காலம்! 

 

கவிஞர் கண்ணதாசன் தைத் திங்களை “காளை மணியோசை களத்துமணி நெல்லோசை / வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை / தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை / கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை / ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய் / வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ / தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக / மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய்” என அழகுதமிழில் பாடினார். 

தைத் திருநாளில்தான் நாம் கொண்டாடி மகிழ்கிறோம். அனைவரும் ஒருங்கிணைகிறோம். 


சாதி வேறுபாடின்றி மத வேறுபாடின்றி அனைவரும் கடைபிடிக்கிறோம். சிலர் மத சம்பிராதயங்கள் வேண்டாம் எனக் கருதினால் வீட்டில் பொங்கல் வைத்து சாப்பிடுகிறார்கள். அவரவர் முடிந்தமட்டும், கால்நடைகளுக்குச் சோறூட்டுகிறார்கள். எனவே, இது தமிழர் அனைவருக்குமான பொதுவிழாவாக இருக்கிறது. 

பொங்கல், தமிழர் திருநாள், உழவர் திருநாள், தமிழ்த்தேசிய நாள் என இதற்கு எத்தனை எத்தனை பெயர்கள்! தமிழ் மக்களைச் சார்ந்த இந்தப் பெயர்களை எல்லாம் வேண்டாமென ஒதுக்கிவிட்டு, எங்கோ உத்திரப்பிரதேசத்தில் அல்ல - நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு ஒரு சிலர் “மகர சங்கராந்தி” என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். “பொங்கல்” என்றால், “தமிழர் திருநாள்” என்றால் இவர்களுக்கு ஆகாது; பிடிக்காது! அவர்கள் சொல்வதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென பிடிவாதம் செய்வார்கள்.

l

 

அழகு தமிழில் “முருகன்” என்று சொன்னால் ஏற்க மாட்டார்கள். “சுப்பிரமணிய” என்பார்கள். முருகனுக்கு வள்ளியோடு காதல் திருமணமாகிவிட்டதை மறைத்து விட்டு, எங்கிருந்தோ வடக்கிலிருந்து “தேவயானி”யைக் கொண்டு வந்து மணம் முடித்து கதை கட்டினார்கள். முருகன் மீது நம்பிக்கை இருந்தால் வள்ளியை வணங்க வேண்டும் அல்லவா? ஏன் தேவயானியைத் திணிக்க வேண்டும்? 

 

இந்த “சுப்பிரமணிய”ருக்கான கோவில் காசியிலே, அலகாபாத்திலே, பாட்னாவிலே இருக்கிறதா? இல்லை! தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனாலும், நம்முடைய முருகனை “சுப்பிரமணிய” எனப் பெயர் மாற்றினால்தான் ஏற்றுக் கொள்வோம் என்று, பெயர் மாற்றி தங்களு டையதாகக்கி கொண்டு, நம் மீது ஒரு உளவியல் போரை நடத்துகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக இது நடக்கிறது! 

 

இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான், இன்றைக்கு தமிழினம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சியாகத்தான் இன்று தமிழ்த்தேசியத் திருநாளாக பொங்கல் திருநாள் - தைத்திருநாள் மலர்ந்துள்ளது. 

 

தமிழ்நாட்டில் தமிழறிஞர்கள் தமிழரின் வீரத்தை - அறத்தை - முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். “தமிழர் திருநாள்” என்று பொங்கல் திருவிழாவுக்குப் பெயர் சூட்டுவதற்கு முயற்சி எடுத்தவர்கள் அவர்களே!

1921ஆம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் நமச்சிவாயனார் நடத்திய மாநாடு - கலந்தாய்வுக்கு, மறைமலையடிகள் தலைமை தாங்கினார். பல அறிஞர்கள் சேர்ந்து தமிழர்களுக்கு ஒரு ஆண்டு முறை வேண்டும், இப்போதுள்ள சமற்கிருத அறுபது ஆண்டு முறை நமக்குப் பொருந்தாது, அதற்கான புராணக் கதைகள் ஆபாசமானவை என்றுகூறி, தமிழர் ஆண்டு முறையை உருவாக்கினார்கள். யாருடைய பெயரால் உருவாக்குவது என ஆய்ந்து, திருவள்ளுவப் பேராசான் பெயரால் உருவாக்கினார்கள். 

 

l

 

கிறித்து பிறப்பதற்கு முன் 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர் என்று கணக்கிட்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகள் சேர்த்து, அதைத் திருவள்ளுவர் ஆண்டு என அறிவித்தார்கள். அதன்படி, தை 1 அன்று “2050” ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்தத் திருவள்ளளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை 1970களில் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. 

அதேபோல், பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக கடைபிடிக்க முடிவெடுத்தார்கள்.


 1937ஆம் ஆண்டு, திருச்சியில் நடைபெற்ற அனைத்துத் தமிழர் மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமறையடிகள், பெரியார், திரு.வி.க., “முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதன் உள்ளிட்ட பலரும் பலரும் பங்கேற்றனர். மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, தமிழர் திருநாளாக பொங்கல் விழாவைக் கடைபிடிப்பது! இன்னொன்று, தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் கொடுப்பது! இரண்டாவது தீர்மானத்தின் படியே, 1938 சென்னை கடற்கரையில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை மறைமலையடிகள் முன்மொழிந்தார். பெரியாரும், நாவலர் பாரதியாரும் வழிமொழிந்து பேசினர். 


“தமிழர் திருநாள்” என்பதை மறைத்து சிலர் “மகர சங்கராந்தி” எனக் கூறுவதுபோல், இன்றைக்குத் தமிழ் நாட்டில் சிலர் “திராவிடர் திருநாள்” எனக் கூறுகின்றனர். கடந்த ஆறேழு ஆண்டுகளாகத்தான் இப்படிக் கூறு கின்றனர். ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? திராவிடம் என்றொரு இனமும் இல்லை; மொழியும் இல்லை! 

 

“திராவிட” என்பது, ஆரியர்களின் மனுதருமத்திலும், புராணங்களிலும் காணப்பட்ட வடமொழிச் சொல்! அதுவும் ஆரிய இனத்தில் சீரழிந்தவர்களைக் குறிக்கவே பயன்பட்ட சொல் அது! தென்னாட்டு பிராமணர்களைக் குறிக்கவே அச்சொல்லைப் பயன்படுத்தினார்கள். 

 


வடக்கே உள்ள பிராமணர்களை “கௌட” பிராமணர்கள் என்றும், தெற்கே உள்ள பிராமணர்களை “திராவிட” பிராமணர்கள் என்றும் குறிப்பிட்டார்கள். 

நம்முடைய சங்க இலக்கியங்கள் - காப்பிய இலக்கியங்கள் -  பக்தி இலக்கியங்கள் எதிலும் “திராவிட” என்ற சொல் இல்லை. தமிழ் - தமிழன் - தமிழ்நாடு என்றுதான் குறிப்புகள் உள்ளன. ஆரியன் என்றும்கூட குறிப்புகள் உள்ளன. கிரேக்கர்களை “யவனர்”கள் என நம் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், “திராவிட” என நம் இலக்கியங்களில் எங்கேயும் குறிப்பு கள் இல்லை! 

 

“திராவிட” என்பதை முதன்முதலில் நம்மீது திணித் தவர் இராபர்ட் கால்டுவெல்! அவர் எழுதிய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலின் வழியே அவர் இதைச் செய்தார். கால்டுவெல் நமக்கு நன்மையும் செய்தவர்; அதே அளவுக்குத் தீமையும் செய்தவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், “கால்டுவெல் சாண் ஏறினால், முழம் சறுக்குவார்” எனக் குறிப்பிட்டார். அவர் சொன்னதை வைத்துக் கொண்டுதான், பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சியில் திணிக்கப்பட்ட “திராவிட” என்ற சொல்லை வைத்து, தமிழர் அடையாளத்தை மறைத் தார்கள். இப்போது, அது எடுபடாது! தமிழ் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள்! 


எல்லோரும் தமிழர் திருநாளைத் தான் கொண்டாடுகிறோம்!

ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடந்த நாயக்கர் ஆட்சியில் ஆதிக்கம் புரிந்த பிரமணர்கள், தமிழ் மொழியை “திராவிட பாஷை” என்றார்கள். இதன் நோக்கம், தமிழ் மொழி ஆரியர்கள் வழிவந்த ஒரு மொழி போல், சமற்கிருதத்திலிருந்து தோன்றிய ஒரு மொழி போல் காட்டுவதாகும்! 

தமிழர் திருநாளை இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என அனைத்து சமயத்தினரும் தமது தேசியத் திருநாளாகக் கடைபிடிக்கிறார்கள்; கடைபிடிக்க வேண்டும். “பகுத்தறிவு” என்பதன் பெயரால் நாம் நம்முடைய மரபை - பழம் பெருமிதங்களையில்களின் கலை நயங்களை - பொறியியல் சாதனைகளை - இலக்கியச் சிறப்புகளை - கலைச் செல்வங்களை அனைத்தையும் புறக்கணித்து விட்டோம். இனி அப்படி விட்டுவிடக் கூடாது! 

 

கடவுளை மறுப்பதும், ஏற்பதும் அவரவரது ஆய்வுக்கு உட்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தில், கடவுளை ஏற் போரும் இருக்கலாம்; மறுப்போரும் இருக்கலாம். ஆனால், ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொள்ளாமல் ஆய்வும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.

 

   இரண்டாயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான திருவள்ளுவப் பேராசான், கணியன் பூங்குன்றனார், கரிகால் பெருவளத்தான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,  ஆரியப்படை கடந்த நெடுஞ்செழின் முதலானோர் மரபில் வந்தவர்தாம் நாம் என்ற உணர்வோடும் உரிமையோடும் சிந்திக்க வேண்டும். 

 

l


நம்முடைய “தேசியத் திருநாள்” பொங்கல் நாள்தான்!

இப்போது பாருங்கள்! பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம், சடுகுடு, ஓட்டப்பந்தயம், ஏறுதழுவல் என எத்தனை எத்தனைப் போட்டிகள் பொங்கல் விழாக்களிலே நடைபெறுகின்றன? வேறு எந்த விழாவிலாவது இப்படி நடக்கிறதா? உடல் திறன், அறிவுத் திறன் ஆகியவற்றை சோதனை செய்து எடைபோடும், செறிவான தமிழர் விழாவாகத்தான் பொங்கல் விழா நடக்கிறது!

 

கேரளத்தில் ஓணம் விழா, ஆரியப் புராணக் கதையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், மலையாளிகளின் “தேசிய விழா”வாக அதை ஏற்கிறார்கள். அங்குள்ள கிறித்தவர்கள், இசுலாமியர்கள் அனைவரும் அதை கடைபிடிக்கிறார்கள். அங்குள்ள அரசு, காங்கிரசு அரசாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்டுகளின் அரசாக இருந்தாலும் அங்கே அரசு ஊழியர்களுக்கான போனசு “ஓணம்” விழாவின்போதுதான் வழங்கப்படுகின்றது. 

ஆனால், தமிழ்நாட்டிலோ ஆரிய எதிர்ப்புப் பேசு வதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆரியப்புராணக் கதைகளால் வடக்கிலிருந்து திணிக்கப்பட்ட “தீபாவளி”யை ஒட்டிதான் அரசு ஊழியர்களுக்கு போனசு வழங்கப்படுகிறது. ஏன் பொங்கலுக்கு “போனசு” வழங்கக்கூடாது என நாங்கள்  கேட்டுக் கொண்டே - வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். ஆனால், “வடவர்கள் நம்மவர்களும் இல்லை; நல்லவர்களும் இல்லை” என அந்தக் காலத்தில் மேடை முழக்கம் செய்தவர்கள் பொங்கலுக்கு போனசு தராமல், ஆரிய தீபாவளிக்கு “போனசு” தந்து கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழர்கள், எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழர் என்ற இன உணர்ச்சியில் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையேல், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம். எதுவும் மிஞ்சாது! எங்கிருந்தாலும் நாம் தமிழ் கற்க வேண்டும்.

இங்கு இங்கிலாந்தில் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதை அறியும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. 

கடந்த திசம்பர் மாதம் (2018) நான் வட அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கும் தமிழ்ப் பள்ளிகள் பெரிய அளவுக்கு வளர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டேன். தமிழீழத் தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டுத் தமிழர்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகள் நடத்தித் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள் இங்கெல்லாம் தன்னார்வத் தொண்டர் களாக இருக்கிறார்கள். ஒரு நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உலகளவில் இது நடந்து வருகிறது!

 

நமக்கு பேரிழப்பாக - 2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் தமிழினப்படுகொலை நடந்தது. பகைவர்கள் நமக்கொரு பாடத்தைக் கற்பித்தனர். இந்தியா ஒருபோதும் தமிழர்க்கொரு தனிநாட்டை - தமிழீழத்தை ஏற்காது! பல நாடுகள் சேர்ந்து கொண்டு, அந்தப் போரை நடத்தின. எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டை ஆளும் இந்தியா அப்போரில் பெரும் பங்கு வகித்தது. 


இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் ஆகாது என்றாலும், அவர்கள் அப்போரில் தமிழர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். வடஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஆகாது என்றாலும், அவர்கள் அப்போரில் தமிழர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். இப்படி முரண்பாடானவர்கள் சேர்ந்து நம் இனத்தை அழித்தார்கள். 

சின்னஞ்சிறிய பகுதியில் தமிழீழதேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற தமிழீழ அரசு - உலகின் முன்மாதிரி அரசாக - நாகரிகத்தை கடை பிடிக்கும் அரசாக - சாதி நீக்கத்தை செயல்படுத்திய அரசாக - தீண்டாமையை, பெண் அடிமைத்தனத்தை ஒழித்த அரசாக நடைபெற்றது. அந்த அரசையே அழித்தார்கள்.

 

ஒவ்வொரு மாவீரர் நாள் உரையிலும் “தமிழீழம் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கும்! இந்தியப் பெருங்கடல் பகுதியில், வேறெந்த சக்திகளும் காலூன்ற விடாமல் தமிழீழம் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அரணாக நிற்கும்” என்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வாக்குறுதி அளித்தார். சொன்னதோடு மட்டுமல்ல, புலிகளின் அரசியல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், இந்திய அதிகாரிகளிடம் அதை நேரில் வலியுறுத்திப் பேசினார். ஆனாலும், இந்தியா அதை ஏற்கவில்லையே, ஏன்? 

“எவ்வளவு முறை தவறு செய்தாலும் - போரில் எதிர்த்து நின்றாலும் சிங்களன் நம்முடைய உடன் பிறந்தவன். நமக்கும் அவனுக்குமான சண்டை - அண்ணன் தம்பி சண்டையைப் போன்றது! ஆனால், தமிழர்கள் எவ்வளவுதான் நட்புக்கரம் நீட்டினாலும்  அவர்கள் நமக்குப் பகைவர்கள்! எனவே, தமிழர்களை நம்ப முடியாது; ஏற்க முடியாது!” என்பதே இந்தியாவின் உளவியல்! இந்தியாவால்தான் நாம் வீழ்த்தப்பட்டோம் என்பதை இன்றைய தமிழ் இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


நாங்கள் 1990களிலிருந்து “தமிழ்த்தேசியம்” என்ற கருத்தியலை முன்வைத்து இயங்கி வருகிறோம். 1990 பிப்ரவரி 25 அன்று, சென்னை பெரியார் திடலில் “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு” நடத்தி, தமிழ்நாட்டிற்கு தன்னுரிமை (Self Determination)  வேண்டுமெனக் கேட்டோம். பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையனார் போன்றோரெல்லாம் அதில் பங்கேற்றனர். தன்னுரிமைத் தீர்மானம் முன்மொழிந்த தற்காக என்னைக் கலைஞர் கருணாநிதி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, அந்தத் தீர்மானத்தை நாங்கள் தான் போட்டோம், எங்களது கருத்துரிமை அது என வாதிட்டோம். எட்டாண்டுகள் கழித்து அவ்வழக்கிலிந்து விடுதலையானேன். 

எது நடந்தாலும் - எந்த அடக்குமுறை வந்தாலும் - தடை வந்தாலும் தமிழினத்தின் இறையாண்மை மீட்பு அரசியலைக் கைவிடக் கூடாது என்று முடிவு செய்தோம். அதேபோல் செயல்பட்டு வருகிறோம்! இன்றைக்கு இக்கருத்தியல் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 


இளைஞர்களின் பேசு பொருளாக மாறியுள்ளது. 

தொடர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளை மறுப்பது, உச்ச நீதிமன்றமோ தீர்ப்பாயமோ தீர்ப்பு வழங்கினால் கூட காவிரிச் சிக்கலில் அதைச் செயல்படுத்த மறுப்பது, மற்ற மாநிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அல்லது அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை, ஐட்ரோகார்பன், எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் திணிக்கப் படுவது போன்றவை தமிழ்நாட்டு இளையோரிடையே ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசு நம்மை இனப்பாகுபாட்டோடு நடத்துகிறது என நம் இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

 

இன்றைக்கு தமிழ்ச்சமூகம், ஒரு உலக சமூகமாக வளர்ந்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்டது பேரிழப்பாக இருந்தாலும், அதன் பின் விளைவாக நாம் ஒரு சர்வதேச சமூகமாக ஒன்றிணைந்து நிற்கும் புதிய வாய்ப்புகளையும் பெற்றுள்ளோம். தகவல் தொழில் நுட்பத்தில் தமிழர்கள் முன்னேறியுள்ளனர். 

 

உலகத் தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று  தமிழீழம்! இவை இரண்டிலும் நாம் வலிமையும் பாதுகாப்பும் ஒற்றுமையும் பெற்றால்தான், உலகத் தமிழர்கள் பாதுகாக்கப்படுவர். எனவே, தமிழ்நாடு - தமிழீழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்கு அக்கறை யோடு போராட வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்க வேண்டும்.   

 

இன்றைக்கு வட அமெரிக்க க அரசியலையும், உலக அரசியலையும் ஆட்டிப் படைக்கிறார்கள் யூத வணிகர்கள், தொழில் வணிகத்தில் அவர்கள் பெற்ற ஆற்றலே அதற்குக் காரணம். நாம் யாரையும் ஆட்டிப் படைப்பதற்காக அல்ல - நம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, நம் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்காக! பன்னாட்டுத் தொழில் - வணிக சமூகமாக நாம் வடிவம் கொள்ள வேண்டும்! நாடு கடந்து தொழில் முனைவோராக தமிழர்கள் வளர வேண்டும்; வலுவாக வேண்டும். தொழிலும் வணிகமும் சிறக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அக்கறை செலுத்த வேண்டும். 

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம்முடைய தமிழ்நாட்டின் காவிரிப்பூம்பட்டினமான பூம்புகாரில் கிரேக்கர்களின் வணிகக் கப்பல்கள் வந்து போயின. சீனக் கப்பல்கள் வந்து போயின.


 நம் கரிகாலச்சோழ மன்னன், திபெத் வரை சென்று நம் வணிகர்களுக்காக பாதை அமைத்துக் கொடுத்துவிட்டு வந்தான். இப்போதும் திபெத் அருகிலுள்ள அந்தப் பாதைக்கு “சோழர் கனவாய்”  என்று என்ற பெயர் இருக்கிறது. அப்படி வாழ்ந்த இனம் நம் தமிழினம்! 

பட்டினப்பாலையில் “கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறை கொடாது” என பொருள்களைப் பெற்றும், தந்தும் வாணிபம் செய்தவர்கள் தமிழர்கள்! வணிகத்தில் அறம் வேண்டும் எனச் சொன்ன இனம் நம் தமிழினம்!

குடும்பத்தை “இல்லறம்” எனக்கூறி, குடும்பம் நடத்துவதிலும் அறம் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்திய இனம் நம் தமிழினம்! 

 

சங்ககாலத்தில், நம் இலக்கியங்களில் கணவனையும், மனைவியையும் “தலைவன்” - “தலைவி” என்று கூறி, ஆண் பெண் சமத்துவத்தைப் பேசிய இனம் தமிழினம்! பிற்காலத்தில்தான் நம்மிடம் பெண்ணடிமைத்தனம் தொற்றிக் கொண்டது. 

இப்படி சிறப்பாக வாழ்ந்த இனம் இன்றைக்கு வீழ்ந்து கிடக்கிறது! இதை மீட்டெடுக்க உழைப்போம் என உறுதியேற்று, சிறப்பாக - அறத்தோடு நாம் வாழ்வோம் என்று கூறி, உங்கள் அனைவருக்கும் எனது தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து விடை பெறுகிறேன்! நன்றி! வணக்கம்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். 

நிகழ்வில், இங்கிலாந்து வாழ் தமிழின உணர் வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

அகேனம் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் திருவாளர்களர்கள் குணரத்தினம் கிருபாகரன், திருச் செல்வம் (செல்வி), சுரேஷ் மார்ட்டின், ஜீவன் உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். ’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்