பீகார் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய மணீஷ் காஷ்யப் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழகத்தில் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பீகார் மாநில அரசும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவாதங்களையும் அளித்திருந்தது. அவதூறாக வீடியோ பரப்பியதாக பீகாரைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யூடியூப் பிரபலமான மணீஷ் காஷ்யப் என்பவர் சினிமா படப்பிடிப்பு போல் படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி அதில் சிலரை நடிக்க வைத்து வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகளைப் படம் பிடித்து அதனை பரப்பியது தெரிய வந்தது. தமிழக தனிப்படை போலீசார் பீகார் விரைந்து போலி வீடியோக்களை பரப்பிய மணீஷ் காஷ்யப்பை கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கடந்த 30 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தது போலீஸ் தரப்பு. அதன்படி மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் முடிந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார். நீதிமன்ற காவலில் 15 நாட்கள் வைக்க உத்தரவிட்டார். வரும் 19 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மணீஷ் காஷ்யப் வைக்கப்படுவதற்காக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow Us