Manikkaraja house incident near Singanallur Coimbatore dt

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிபுத்தூர் பகுதியில் மாணிக்கராஜா என்பவர் தனது குடும்பத்துடன் 3 மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோவை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்து இன்று (10.06.2025)வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டின் 2வது தளத்தில் இன்று பிற்பகல் தீ பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் துறைக்கும், பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் வீட்டின் 2வது தளத்தின் பால்கனியில் இருந்த வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்து அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பார்ப்போர் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. அதே சமயம் தீயணைப்புத் துறையினர் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கிட்டத்தட்ட சுமார் 2 மணி நேரம் போராடி 2வது தளத்தில் இருந்து மற்ற தளத்திற்கு தீ பரவாத வண்ணம் தீயை அணைத்தனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிபத்து நடைபெற்றதற்கான காரணம் குறித்தவிசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.