ADVERTISEMENT

மணிகண்டனுக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு! -கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆரூடம்!

05:02 PM Aug 10, 2019 | kalaimohan

ராஜபாளையத்தில் கால்நடை மருத்துவமனையை இன்று திறந்து வைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“திமுக பொய்யான வாக்குறுதிகள் கொடுத்ததன் தாக்கம் இன்னும் மக்கள் மனதிலிருந்து அழியாததாலேயே வேலூரில் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக வாக்கு வங்கி குறைந்திருக்கிறது. அதிமுக வாக்கு வாங்கி கூடியிருக்கிறது. ஒரு பூத்திற்கு 4 ஓட்டு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் கவனமாக வேலை செய்திருந்தால் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கும். அதிமுகவிற்கு இது ஒரு வெற்றியின் படிக்கட்டு. இந்தத் தேர்தல் முடிவை மக்கள் அதிமுக வெற்றியாகத்தான் கருதுவார்கள். திமுக வெற்றிகரமாக தோல்வி அடைந்துள்ளது. திமுக இனம், மதம் ஆகியவற்றை வைத்துப் பிரச்சாரம் செய்தது.


இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவிற்கு திமுகவிற்கு ஓட்டு விழவில்லை. இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்ததன் விளைவாகத்தான் திமுக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் பெற்றது வெற்றியும் இல்லை நாங்கள் பெற்றது தோல்வியும் இல்லை.

இன்னும் இரண்டு மாதம் கழித்து வேலூர் தேர்தல் வந்திருந்தால் அதிமுக 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். வேலூர் நாடாளுமன்ற தேர்தல் எங்களுக்கு ஒரு பாடம். அடுத்த நடைபெறக்கூடிய சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது. ஒரு தேர்தல் முடிவை வைத்து ஒரு கட்சியின் வரலாறை நிர்ணயித்துவிட முடியாது.

வைகோ ஒண்ணும் சிறுபிள்ளை கிடையாது வைகோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அவரது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார். வைகோவின் வளர்ச்சிக்கும் அவர் பேச்சுதான் காரணம். வைகோவின் வீழ்ச்சிக்கும் அவர் பேச்சுதான் காரணம். மனதில் என்ன படுகிறதோ அதை வைத்து அப்படியே பேசிவிடுவார். எதையும் பொருட்படுத்தாமல் உண்மையை உடைத்துப் பேசும் தமிழக அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர்.

முதலமைச்சர் எடப்பாடியார், யாருடைய வளர்ச்சியையும், தடுக்கவோ கெடுக்கவோ மாட்டார். அமைச்சர் மணிகண்டன் கொடுத்த பேட்டி கட்சிக்குள் ஒற்றுமையைக் குலைத்து விடுமோ என்ற நோக்கத்தில்தான் பதவி பறிக்கப்பட்டுள்ளது. திரும்பவும் மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது.

வேலூர் தேர்தலில் பாஜக மாநில பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடாததற்குக் காரணம் அவர்களுக்கு பல வேலைகள் இருந்திருக்கலாம் அதனால், பிரச்சாரத்திற்கு வராமல் போயிருக்கலாம். இன்னும் முனைந்து செயல்பட்டிருந்தால், வேலூர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். இனிவரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும்.உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரும். எப்போது வேண்டுமானாலும் வரும்.ஆனால் திமுக வெற்றி பெறாது.” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT