தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களை ஆய்வு செய்யவும், விதிமீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கலால்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தேனியை சேர்ந்த விக்னேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டத்தில் தற்போது அதிகமாக மனமகிழ் மன்றங்கள் இயங்கி வருகிறது.இந்த மனமகிழ் மன்றங்கள் நிரந்தர கட்டிடங்கள் இல்லாமல் தற்காலிக கூரை அமைத்து பாதுகாப்பின்றி செயல்பட்டு வருகிறது.

மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது.இதனால் இப்பகுதி தொழிலாளர்கள் தங்களது தினசரி சம்பள பணத்தை சூதடத்தினால் இழந்து வருகின்றனர்.மணமகிழ் மன்றத்தில் சூதாட்ட போட்டியில் தோல்வி அடைவோரை அடைத்து வைக்கின்றனர்.அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சார்பில் பணம் செலுத்திய பின்பு விடுகிவிக்கப்படும் கொடுமை நடந்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களுக்கு காவல் துறையினரும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கலால்துறை அதிகாரிகள் சிறப்பு குழு அமைத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனுமதிபெற்ற மனமகிழ் மன்றங்களை திடீர் ஆய்வு மேற்கொள்ளவும், விதிமீறி செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மனமகிழ் மன்றத்தின் அனுமதியை ரத்து செய்யவும் கலால்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு.