
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை - ஓசூர் சாலையில்கோவை பாஜக தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத கருப்பு நிற உடை அணிந்த நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்தவர் அலுவலகத்தின் ஒரு அறைக்குச் சென்று உள் பக்கமாகத்தாழிட முயன்றார். உள்ளே இருந்த வானதி சீனிவாசனின் உதவியாளர் உள்ளே புகுந்த அந்த இளைஞரை வெளியே துரத்தினார். இதனால் அலுவலகத்தை விட்டு ஓடிய அந்த நபர் சாலையில் விழுந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அலுவலகத்தின் உள்ளே மற்றும் வெளிப்புறத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், அதே நபர் அன்று இரவு எட்டு மணி அளவில் அண்ணா சிலை சிக்னல் அருகே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனம் மோதி அவர் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த நபர் மதுபோதையில் இருந்தாரா; வாகன விபத்து ஏற்பட்டு இறந்தாரா; எதற்காக வானதி சீனிவாசன் அலுவலகத்திற்கு உள்ளே சென்று தாழிட முயன்றார் எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கியுள்ளது.
அதே நேரம் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “நேற்று நடந்த இந்த சம்பவம் குறித்து நேற்றே எனது அலுவலக உதவியாளர் காவல்துறையில் புகார் அளித்து சிஎஸ்ஆர் காப்பி பெற்றுள்ளார்.இது தொடர்பாக காவல்துறை ஆய்வாளர்களிடம் பேசியுள்ளோம். யார் அவர் எதற்காக உள்ளே வந்தார் என்ற பின்னணி குறித்து நாங்களும் கேள்வி எழுப்பியதாக”தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)