Skip to main content

நீதிமன்றத்தையே ஏமாற்றி வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கியவர் கைது!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளி விவரத்தில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.1% அதிகரிப்பு என்கிற நிலையில் அரசாங்க வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தவறுதலாக கிடைத்த அரசு பணி நியமன ஆணையை வைத்து ஏமாற்றிய வேலைக்கு சேர்ந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. 



அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்கம் செம்பியான்குடி வடக்கு காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ராஜிவ்காந்தி. இவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணபித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். 

 

court



தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஆணையை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைத்தனர். வேலைக்கான ஆணையை போஸ்மாஸ்டர் சரியாக விசாரிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் வடக்கு தெருவில் வசிக்கு சப்பாணி மகன் ராஜீவ்காந்தியிடம் கொடுத்துள்ளார். 



அவரும் நான் அவரில்லை என்று தெரிவிக்காமல் வேலைக்கான ஆணையை பெற்றுள்ளார். இந்த ஆணையை வைத்து ஆள் மாறாட்டம் செய்து வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்று ராஜீவ்காந்தி முடிவு செய்து அனைத்து ஆவணங்களையும் கொண்டு கோர்ட் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். 



ராஜீவ்காந்தியின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த அதிகாரிகள் ராஜீவ்காந்தியை லால்குடி உரிமையில் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியமர்த்தினார்.



இதனையடுத்து லால்குடி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணி சேர்ந்த ராஜீவ்காந்தி கடந்த 45 நாட்கள் பணிபுரிந்திருக்கிறார். 15 நாட்கள் வேலை செய்தற்கான சம்பளத்தை வாங்கியுள்ளார். 



டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்றும் அதற்கான ஆணை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் உண்மையான ராஜீவ்காந்தி. உடனே அவர்கள் தரப்பில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை அனுப்பி விட்டோம். நீங்களும் வேலைக்கு சேர்ந்து சம்பளமும் வாங்கியிருப்பதாக நீதிபதி சொல்லியிருக்கிறார். 



நீதிபதி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு மயக்கமே வந்துள்ளது. எனக்கு எந்த ஆணையும் வரவில்லை. நான் எங்கையும் வேலைக்கு சேரவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை சொல்லியிருக்கிறார். ராஜீவ்காந்தியின் பேச்சை கேட்ட நீதிபதி எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து விசாரணை நடத்த சொல்லி உத்தரவிட்டுயிருக்கிறார். 



விசாரணையில் சப்பாணியின் மகன் ராஜீவ்காந்தி ஆள்மாறாட்டம் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி பணியில் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு லால்குடி நீதிமன்றத்தின் தலைமை எழுத்தர் மெஸ்லினா மெரினா மோனிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலிசார் சப்பாணி மகன் ராஜீவ்காந்தியின் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு; பொன்முடி வழியில் ஐ.பெரியசாமி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
order from judge in I.Periyaswamy case; its going on Ponmudi way

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் அமைச்சர் பதவியை பெரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை ஐ.பெரியசாமி தரப்பு எடுத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

 I.Periyaswamy on Ponmudi way

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.