
ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் மாடு பிடி வீரர் தனது பிறந்த நாளை, ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்து, குடும்பத்தோடு சிலை அருகே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் புதுக்கோட்டை புறநகர் கோயில்பட்டி கிராமத்தில் திருமணம் செய்து செய்துகொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஏராளமான வாடிவாசல்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளார். நேற்று(10.12.2023) தனது பிறந்த நாளை கொண்டாட நினைத்தவர் கேக், மாலை, பட்டு துண்டு வாங்கிக் கொண்டு தனது குடும்பத்தினர் நண்பர்களுடன் புதுக்கோட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு வந்து, காளை சிலைக்கு பட்டு துண்டு, ரோஜா பூ மாலை அணிவித்த பிறகு, நண்பர்கள் குடும்பத்தினர் ஹேப்பி பர்த்டே சொல்ல, சிலையின் கீழே வைத்து பிறந்த நாள் கேக் வெட்டி, தனது பிறந்த கொண்டாடினார். இந்த நிகழ்வைப் பார்த்து அந்த வழியாகச் சென்றவர்களும் இறங்கி வந்து, மாடுபிடி வீரர் தினேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிச் சென்றனர்.
காளைகள் மீது எனக்கு பாசம் உண்டு. பல வாடிவாசல்களில் காளைகளை கட்டி இருக்கிறேன். இன்று எனது பிறந்த நாளை காளை சிலை அருகே கொண்டாட நினைத்தேன். ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, காளையின் காலடியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.