
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ் பாபு (35) பேட்மிட்டன் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தை ஒட்டியுள்ள பேட்மிண்டன் கோச்சிங் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். இன்று வழக்கம் போல அங்கு வந்த பொழுது மறைத்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தினேஷ் பாபுவை முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பாபு உயிரிழந்தார்.
கொலையை நிகழ்த்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த அம்பத்தூர் போலீசார் தினேஷ் பாபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடலானது கொண்டு செல்லப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில் இந்த கொலைச் சம்பவத்திற்கும் முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியா என்பது தொடர்பாக கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.