/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2049.jpg)
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இவர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மாட்டு சந்தை பகுதியில், கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வேல்முருகனை மீட்டு, விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வேல்முருகன் கழுத்தில் பிளேடு கொண்டு அறுக்கப்பட்டு இருந்ததால், கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்களா? அல்லது தற்கொலைக்கு முயன்றரா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேல்முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூரில் பேக்கரி கடை நடத்துவதற்காக, கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் இயங்கி வரும், பிரபல தனியார் வங்கியில் 15 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பேக்கரி கடை தொடங்கிய பின்பு, கரோனா வைரஸ் தொற்று காலம் ஆரம்பித்ததால் பேக்கரி தொழில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ச்சியான ஊரடங்கு மற்றும் தொழிலில் நஷ்டம், வங்கியின் தொல்லை என பல்வேறு இன்னல்களை சந்தித்த வேல்முருகன், பேக்கரி தொழிலை கைவிட்டு, பெங்களூரில் உள்ள சாய்பாபா காலனியில் இயங்கி வரும் பேக்கரி கடையில் மாத சம்பளத்திற்கு சேர்ந்துள்ளார். மாத சம்பளத்தை வைத்துக் கொண்டு வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால், தொடர்ச்சியாக அந்த வங்கி கொடுத்த அழுத்தம், மற்றும் குடும்ப சூழ்நிலை என பல்வேறு காரணங்களால், மன உளைச்சல் அடைந்த வேல்முருகன் பெங்களூரிலிருந்து விருத்தாசலம் வழியாக ஊருக்குச் செல்ல வந்தவர், விருத்தாச்சலம் மாட்டு சந்தை பகுதிக்கு சென்று தான் வைத்திருந்த பிளேடால் தனது கை மற்றும் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருத்தாச்சலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிகமாக காயம்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு சென்றனர். வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல், ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாச்சலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)