man petitioned to close Calquary passed way doubting social activists

கரூர் அருகே கல்குவாரி பொலிரோ வேன் மோதி ஜெகநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இது முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா எனப் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

கரூர் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகே செல்வகுமாருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

Advertisment

நிலப் பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் மீது கடந்த 2019ஆம் ஆண்டு செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் செல்வகுமாரின் கல்குவாரி, உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் பல்வேறு புகார்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மூன்று தினங்களுக்கு முன்பாக செல்வகுமாருக்கு சொந்தமான கல்குவாரி சட்ட விரோதமாக இயங்கியதால் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை க. பரமத்தி அருகே கருடயம்பாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்குச் சொந்தமான பொலிரோ வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் க.பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெகன்நாதன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சட்ட விரோதமாக இயங்கிய கல்குவாரியை மூடுவதற்கு காரணமான ஜெகநாதனை லாரி ஏற்றிக் கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது முன் விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.