/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1001_73.jpg)
திருச்சி உறையூர் பகுதியைச்சேர்ந்தவர் குணசேகர்(55). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார்,தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் குணசேகர் நேற்று முன்தினம் நள்ளிரவு ராமலிங்க நகர் முதலாவது பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே தலை, முகத்தில் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். அருகில் ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன. இதனால் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 50) என்பவருக்குத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தப்பி ஓடிய அவரைப் போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
“எனது சொந்த ஊர் காரைக்குடி. மனைவி குழந்தைகளைப் பிரிந்து தென்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். பேப்பர், பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தேன். சம்பவத்தன்று ராமலிங்க நகர் பகுதிக்கு இரவு சென்றேன். பின்னர் குணசேகர் படுத்திருந்த கடை வராண்டாவில் அமர்ந்து மது அருந்த சென்றேன். அப்போது குணசேகர் என்னிடம் மது கேட்டார். நான் கொடுக்க மறுத்தேன். இதனால் கோபமடைந்த அவர் என்னை எட்டி உதைத்து மிரட்டல் விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அங்கு கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் மண்டை உடைந்து குணசேகர் இறந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றேன். போலீசார் துப்புத் துலக்கி என்னை கைது செய்துவிட்டனர்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)