
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் திருவண்ணாமலையில் வந்து தங்கி ஆன்மீகத்தில் ஈடுபட்டு தியானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் 1000க்கும் அதிகமான சீனா, கன்னடா பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து தனி வீடுகளிலும் பிரபல ஆசிரமங்களிலும் தங்கி தியானம் செய்து வருகின்றனர்.
சமீப காலமாக திருவண்ணாமலையில் கோவிலுக்கு வரும் ஆன்மீக பக்தர்களை குறி வைத்து போதை வஸ்துக்களை விற்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள காப்புக்காடு மலையில் ஒரு குகையின் அடியில் தனியாக தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருவண்ணாமலை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மலையில் பதுங்கி இருந்ததாக சொல்லப்படும் கோபுர தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை நேற்று போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சம்பவ தொடர்பாக அந்த பெண் தன்னுடைய பிரான்ஸ் நாட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழலில், தற்போது திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.