man incident his friend 2 children for not repaying a loan of rs 14,000

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கமாக இருந்துள்ளது. அதே போல் வசந்த், நேற்று மாலையும் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்தின் செல்போனுக்கு அழைத்துள்ளார் யோகராஜ். ஆனால், செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அச்சமடைந்த யோகராஜ், உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர், குழந்தைகளின் உடல்களை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வசந்த்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

வசந்திடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், யோகராஜிக்கு வசந்த் 14,000 ரூபாய் பணத்தைக் கடனாகக் கொடுத்திருக்கிறார். அதைத் திருப்பிக் கேட்ட போது யோகராஜ் தர மறுத்து வந்துள்ளார். இதனால் வசந்த்துக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் யோகராஜின் குழந்தைகளை வசந்த் கொலை செய்தார் எனத் தெரியவந்துள்ளது.