
திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (30). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை பிணையில் வெளியில்வந்தார். ஆனால், அந்தக் கொலை வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். அதனால், அவர்மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம். இது சம்மந்தமாக இளவரசன் மீது அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கும் நிலுவையில் இருந்தது.
அதேபோல், இளவரசன் மீது கடந்த 19.09.21ஆம் தேதி, பொன்மலை காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு நீதிமன்றம் பொன்மலை காவல்நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கியது. ஆனால் அவர் அந்த நிபந்தனையையும் மீறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தொடர்ந்து பல்வேறு குற்றங்களிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.
அதனால், அவர் மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கை ஒன்றை, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதன்படி ஒரு வருட காலத்திற்கு நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இளவரசன் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் அவர் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 73 நாட்களும் சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இளவரசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.