
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ரோடு, அன்னை அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி மர்ம நபர் ஒருவரால், இரண்டு சவரன் தங்க நகை, மடிக் கணினி, செல்போன் ஆகியவை திருடபட்டது. மேலும் கடந்த 11ஆம் தேதி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரகாளி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் தாலி, பித்தளை பானை உள்ளிட்டவை திருடப்பட்டது. அதேபோல் திருச்சி திருவானைக் காவல் கொள்ளிடக்கரை நேதாஜி நகரில் உள்ள வீட்டின் உள்ளே புகுந்து 4 சவரன் நகை, கை கடிகாரம், பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டது.
இந்த மூன்று திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த அபிமன்யு என்பவரை அழைத்து விசாரணை நடத்தியதில் 3 திருட்டு சம்பவங்களிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்தனர்.