/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_275.jpg)
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரின் மகன் மணிமாறன் (26) என்பவர், கடந்த 31.12.2020 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் புகார் ஒன்று கொடுத்தார்.
அப்புகாரில், தான் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தபோது அதே பள்ளியில் படித்த சீனியர் மாணவரான வேப்பூர் புது காலனியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவருடன் நண்பராக பழகி வந்தேன். பின்பு 1.9.2019 அன்று பாலசந்தர் தன்னைச் சந்தித்து, தான் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமையக டிப்போவில் 2016-ம் ஆண்டு முதல் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருவதாகதெரிவித்தார்.
மேற்படி டிப்போவில் அதிக இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ளதாக ஆசை வார்த்தை கூறியதின் பேரில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பல தவணைகளாக ரூ.8,00,000த்தை பாலசந்திரனிடம் நேரிலும், அவரது வங்கி கணக்கிலும் செலுத்தினேன். மேலும் தனது சித்தி, விருத்தாசலத்தை சேர்ந்த கண்ணன் மனைவி சிவரஞ்சினியும் ரூ.8,00,000 கொடுத்திருக்கிறார்.
பாலசந்திரன், தனக்கு பணிநியமன ஆணை கொடுத்து டிப்போவிற்கு வரவைத்து 13.01.2020 அன்று வேலையில் சேர்த்துவிட்டு வருகை பதிவேடு தயார் செய்து தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மனுவில், பின்பு கரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு வரவேண்டாம் என பாலசந்திரன் கூறினார். பின்பு ஒரு மாத சம்பளம்ரூ.18,500த்தை அவரது வங்கி கணக்கிலிருந்தே செலுத்தினார்.
அதன்பின் சந்தேகமடைந்து டிப்போவில் பாலசந்திரன் கொடுத்த பணி நியமன ஆணையைக் காட்டி விசாரித்தபோது அனைத்தும் போலியானவை என தெரியவந்தது என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல், விருத்தாசலத்தைச் சேர்ந்த சபரிநாதன், தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த மகேஷ், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பாலகுமரன், சிறுபாக்கத்தைச் சேர்ந்த இலக்கியா, சின்னசேலம் மஞ்சுளா பாண்டிச்சேரியைச் சேர்ந்த சத்தியவாணி,சாமுண்டீஸ்வரி, வேப்பூரைச் சேர்ந்த அருண், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த பாலச்சந்தர், லீனா, பாதுரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பெண்ணாடத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என 14 நபர்களிடம் மொத்தம் ரூ.1,03,15,000யை பாலச்சந்திரன் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி, போலி பணிநியமன ஆணைகளைக் கொடுத்து மோசடி செய்துவிட்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுப்பதுடன், தங்களது பணத்தைப்பெற்று தரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கனகேசன் பரிந்துரையின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் துர்கா மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் லூயிஸ்ராஜ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு, வேப்பூர் புதுகாலனியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன்பாலச்சந்திரன் (33) என்பவரை வேப்பூரில் கைது செய்ததுடன், பாலச்சந்தர் வீட்டிலிருந்த கணினி, சீல்கள், செல்ஃபோன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)