
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் வசந்தகுமார் (29). சேத்தியாத்தோப்பு 4 ரோடு சந்திப்பு பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகள் தனுஸ்ரீ(22). இவர் கடந்த 2019ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது இவருக்கும், வசந்தகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற கருத்தில், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் வாசலில் தாலிக்கட்டி கணவன் மனைவியாக மாறியுள்ளனர். அதன்பிறகு தனுஸ்ரீ திருப்பூருக்கு பின்னலாடை கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வசந்தகுமாரும் தனது வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் காங்கேயம், அவிநாசி போன்ற பகுதிகளில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததனர். தற்போது கரோனா நோய் பரவல் தீவிரம் காரணமாக லாக்டவுன் ஏற்பட்டது. இதனால் திருப்பூரில் வேலை இல்லாததால் இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்ததோடு அவரவர் பெற்றோருடன் சென்று வசித்து வந்துள்ளனர். தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை இருவருமே தங்களது வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளனர்.
இதை வசந்தகுமார் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வசந்தகுமாரின் பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர். வசந்தகுமாரும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் நிச்சயதார்த்தம் வரைச் சென்றுள்ளது. இந்தத் தகவல் தனுஸ்ரீக்கு தெரியவரவே, அப்போதுதான் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனுஸ்ரீ சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில், வசந்தகுமார் தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவிட்டு தற்போது வேறு திருமணம் செய்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
தனுஸ்ரீயின் புகார் மீது வழக்குப்பதிவு செய்த சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய போலீசார், வசந்தகுமாரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.