ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக நகைப் பறிப்பில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த மாதத்தில் மட்டும் ஐந்து பேரிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மற்ற பறக்கும் ரயில் நிலையங்களிலும் நகை பறிப்பு நடந்துள்ளதாக காவல்துறையினருக்குத்தகவல் கிடைத்தது. இதனையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருவான்மியூர், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்டபறக்கும் ரயில் நிலையங்களில் தனிப்படை காவலர்கள் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நகை பறிப்பு சம்பவங்கள் அனைத்தும் மதிய வேளைகளில் நடந்ததும், வயதான பெண்களைக் குறித்து வைத்து நடந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனிடையே, 10 நாட்களுக்கு மேலாக பறக்கும் ரயில் நிலையங்களில் தனிப்படையினர் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், பெருங்குடி ரயில் மேடையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்துக் கொண்டு கொள்ளையன் ஓடிய போது, தனிப்படைக் காவலர்கள் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பதும், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராகவும் பணியாற்றி வருவது தெரிய வந்தது. மேலும், ஆன்லைன் ரம்மியில் இழந்த பணத்தை மீட்கவும், மீண்டும் விளையாடுவதற்காகவும் பணத்தைத் திரட்டநகை பறிப்பில் ஈடுபட்டது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய காவலர்கள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.