/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai-high-court-art_6.jpg)
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டசென்னையைச் சேர்ந்த உதித், சூரியா உள்ளிட்ட சில மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பான விசாரணையில் இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு கல்கத்தா, டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற 3 இடங்களில் தேர்வு எழுதி மோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை அறிக்கையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்பிக்கப்பட்டன.
இத்தகைய சூழலில் தான் இது தொடர்பான வழக்கில் 27 வது குற்றவாளியாக உள்ள தன்னை விடுவிக்குமாறு சென்னையை சேர்ந்த தருண் மோகன் என்பவர் உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (10.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, “2019 ஆம் ஆண்டு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீட் தேர்வு மோசடி வழக்கில் ஆட்மாறாட்டம் செய்தவர்களின் ஆதார் விவகாரங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தரவில்லை. இதனால் குற்றப்பத்திரிக்கை செய்ய இயலவில்லை ” என தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement--art-file_55.jpg)
இதனைக் கேட்ட நீதிபதி புகழேந்தி தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீட் ஆள்மாறாட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் செயல்படுவது போல் தெரிகிறது. ஏனென்றால் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு விவரங்களை ஏன் இன்னும் தர மறுக்கிறீர்கள். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளின் தாலியைக் கூட கழற்றிச் சோதனை செய்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் நீட் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் ஆவணங்களை இதுவரை வழங்கவில்லை ஏன்?. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத எவ்வாறு அனுமதித்தீர்கள். இது போன்று நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்க கூடாது” என கேள்வி எழுப்பினார். இறுதியாக இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்வதாக தேசிய தேர்வு முகமை கால அவகாசம் கோரியது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)