/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_148.jpg)
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது ஆலமரத்துப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக்காணவில்லை என்றுதெரிவித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட பாப்பாரப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், ராணுவ வீரர் மனைவியைக் குழந்தைகளுடன் கடத்தியதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
39 வயதான அதியமான் கடத்தூா் அருகே உள்ள மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை அதியமான் குறிவைத்து பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை மருத்துவமனையில் செய்து தனது செல்போன் எண்ணை கொடுத்து நெருங்கி பழகி வந்துள்ளார். எப்போது வேண்டும் என்றாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும் அழைக்கலாம் என்று நம்பிக்கையானவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இதனால், மருத்துவமனைக்குவரும் பலருடன் அதியமானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அதியமான் நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கியுள்ளார். பின்னர், போலியாக பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுவரை இவரிடம் இராணுவ வீரரின் மனைவி, கணவனை இழந்தப் பெண் எனமொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்பணத்தை வேலைக்காககொடுத்து இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பலரிடம் அதியமான் கைவரிசை காட்டியிருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்களை மட்டும் குறிவைத்து பழகும் அதியமான் சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இப்படி, மோசடி பேர்வழியாக இருக்கும் அதியமானுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை திசை மாற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, அதன் மூலமும் தனியார் மருத்துவமனையில் அதியமான் கமிஷனை பெற்றதை அறிந்த போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி மன்னன் அதியமான் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் 25 லட்சத்திற்கு மேல் பணத்தை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி மருத்துவமனை ஊழியா் ஒருவர் பண மோசடி, பாலியல் ஆத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)