Skip to main content

மக்கள் நீதி மய்யத்தின் வழக்கு வாபஸ்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

makkal needhi maiam party withdraw chennai high court

 

'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

 

கடந்த மக்களவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 'பேட்டரி டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் 'பேட்டரி டார்ச் லைட்' சின்னத்தைக் கேட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையம் 'பேட்டரி டார்ச் லைட்' சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'பேட்டரி டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கியது.

 

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில், "தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்தச் சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தனர். 

 

இதனிடையே, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் வேண்டாமென்று எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி அறிவித்தது. இதையடுத்து, அந்தச் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

 

இந்த நிலையில், 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கக்கோரி தொடரப்பட்டிருந்த வழக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

 

 

சார்ந்த செய்திகள்