makkal needhi maiam leader kamal haasan car incident police investigation

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (14/03/2021) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்பு, பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு சென்றுக் கொண்டிருந்த கமல்ஹாசன் காந்தி சாலை அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கமல்ஹாசனின் கார் மீது தாக்கியுள்ளார். இதில் கமல்ஹாசன் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது; கமல்ஹாசனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேலும், கமல்ஹாசன் கார் மீது தாக்கியஅந்த நபரை பிடித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கட்சியினர் தாக்கியதில் படுகாயமடைந்த அந்த நபரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.