ADVERTISEMENT

'சென்று வா விவேக்': கமல்ஹாசன்!

11:32 PM Apr 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது, "வணக்கம், ஒரு கலைஞன் தன் திறமையால் தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதும், மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு ஆளனாக அமைவதும் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருப்பது ஒரு வகையான கலைஞர்களைக் குறிக்கும். ஆனால் தன்னுடைய கலை, சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும். தனக்குப் பின்னும் அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்னும் கலைஞர்கள்தான், அவர்கள் இறந்த பிறகும் ஆயுள் உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படி என்.எஸ்.கே. அவர்களைச் சொல்லும்போது விவேக்கின் பெயர் ஞாபகம் வராமல் இருக்காது. சின்னக்கலைவாணர் என்ற பெயரை அவர் விரும்பி, தனக்கு வர வேண்டும் என்று நினைத்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் முயற்சியில் இருக்கும்போதே இறந்துபோனார் என்பதுதான் உண்மை. அவருக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற விதைகள் மரமாக வளரும். என்னைப்போலவே அவரும் அதை தக்க தருணத்தில் உணர்ந்தார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

ஆனால் இன்னும் எஞ்சிய வேலை நிறைய இருக்கும்பொழுது, அவர் சென்றது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் என் பெர்ஸனல் ஃப்ரண்ட். அவர் என்கூட நடிக்கலங்கறது வருத்தம். ஏன்னா இரண்டு பேரும் ஒரே பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள். ஒரே குருவின் பாதத்தைத் தொட்டு வணங்கியவர்கள். அதனால் நாங்க இரண்டு பேரும் ஒன்னா தோல் உரசவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அந்த மாதிரி விபத்துகள் நடப்பது உண்டு இந்த துறையில். அதை நிவர்த்தி செய்ய வேண்டும். நீங்க அரசியலுக்குப் போயிட்டீங்கன்னா, அப்புறம் என்கூட நடிக்க முடியாமலேயே போய்விடும் அப்படினு பயந்தார். அதற்காகத்தான் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்பொழுதும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். இன்னும் நிறைய பேச வேண்டியிருக்கிறது என்று சொல்லிவிட்ட அந்த உரையாடல் அப்படியே நிற்கிறது. அந்தக் கனம் என் மனதில் இருக்கிறது.

அதை சோகமாக எடுத்துக்கொள்ளாமல், அங்கு நாங்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், செய்ய வேண்டிய வேலைகள் என்று நாங்கள் ஒரு சின்னத் திட்டங்கள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் அவர் போட்ட பதியங்களில், விதைகளில் ஒன்றாக நான் எடுத்துக்கொண்டு, அதைத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன். கலைஞர்கள் வாழ்க்கையை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கான பெரிய எடுத்துக்காட்டு விவேக் அவர்கள். அதை எப்படி சீரியஸா... பரத நாட்டியமா இருக்கலாம், கலையா இருக்கலாம், பாட்டா இருக்கலாம், காமெடியாகக் கூட இருக்கலாம். ஆனால் அதில் கூட நீங்கள் சென்று அவர்கள் மனதைத் தொட முடியும் என்பதற்கான ஒரு நிரூபணம். அந்த மாதிரி நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் இருக்கும்போதே போற்றப்பட வேண்டும். அப்படி போற்றப்பட்டவர்தான் விவேக் அவர்கள். அவருக்கு வாழ்த்துகள் சொல்லியே பழகிவிட்ட எனக்கு, இரங்கல் சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் இந்த நிலைமை வரும் என்பதனால் தயங்காமல் சொல்கிறேன். மிகவும் வருந்துகிறேன்; இதுபோன்ற கலைஞர்கள் இனியும் தோன்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

ஒரு நல்ல பிள்ளையை அனுப்பி வைக்கும்போது 'சென்று வா' என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதுபோல், நல்ல கலைஞர்களை நாம் அனுப்பி வைக்கும்போது 'சென்று வா, வேறொரு கலைஞனாக’ என்று சொல்ல வேண்டும். அப்படி விவேக் போன்ற ஒரு கலைஞர் மீண்டும் உருவாக வேண்டும். 'சென்று வா விவேக்’ என்று சொல்கிறேன். இதுபோன்ற பல கலைஞர்களை நாம் வழியனுப்பித்தான் ஆக வேண்டும். அப்போதெல்லாம், அதேபோல் ஒரு கலைஞர் மறுபடியும் உருவாக வேண்டும் என்ற வாழ்த்துடன் அவர்களை வழியனுப்பி வைப்போம்". இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT