கடந்த சில தினங்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழகம் முழுவதும் மாநில எல்லை சோதனைச்சாவடிகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி" என குறிப்பிட்டுள்ளார்.