Skip to main content

மாணவர்களை பன்முகத்திறன் படைத்தவர்களாக உருவாக்கவேண்டும்! - முதன்மைக்கல்வி அலுவலர் பேச்சு!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
c.o. vanaja


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் தனித்தனியே கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசும்போது கூறியதாவது,

ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரும் ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு தங்களது பள்ளியை கனவு பள்ளியாக மாற்றவேண்டும். பள்ளிகளில் விளையாட்டுவிழா. ஆண்டு விழா நடத்தப்படவேண்டும். ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரும் மற்றும் ஆசிரியர்களும் தங்களது பள்ளியில் சிறப்பாக செய்து வரும் கற்பித்தல் உத்திகள் மற்றும் சிறப்பான செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்து மற்ற பள்ளிகள் பின்பற்றவும். சிறப்பாக செயல்பட்டுவரும் மற்ற பள்ளிகளின் செயல்பாடுகளை தெரிந்து அதனை தங்களது பள்ளியில் நடைமுறைப்படுத்தவும் பளளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்பட்டுவரும் ஒர்க்பிளேஸ் முகநூலில் கட்டாயமாக இணையவேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பில் தலைமையாசிரியர்கள் தீவிர கவனம் செலுத்தவேண்டும். பள்ளித்தகவல் மேலாண்மை முறைமை(எமிஸ்)யில் பதிவு செய்துள்ள விவரங்கள் படி இந்த ஆண்டு பத்து, பதினொன்று. பன்னிரெண்டு ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்கு அரசுப்பொதுத்தேர்வு எழுதுவதற்குரிய விவரங்கள் திரட்டப்பட உள்ளதாலும், இனி வரும் காலங்களில் மாணவர்களுடைய அனைத்து விவரங்களும் பள்ளித்தகவல் மேலாண்மை முறையின்படி(எமிஸ்) திரட்டப்பட உள்ளதால் தங்களது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளித்தகவல் மேலாண்மை முறைமையில் சரியாக பதிவுகள் செய்யப்பட்டுள்ளதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.

இதில் தலைமையாசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டும். மன்ற செயல்பாடுகள், இணைச்செயல்பாடுகள், மாஸ் ட்ரில், கழிவறை பயன்பாடு, குடிநீர் பயன்பாடு, பள்ளிவளாகத்தூய்மை, ஆதாருக்காக அனைத்து மாணவர்களுக்கும் புகைப்படம் எடுத்தல், ஆகியவை நடைபெற்றதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும். தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018ன்படி மத்திய ஆய்வு அலுவலர்கள் அனைத்துப்பள்ளிகளிலும் கடந்த மாதம் 1ந்தேதியில் இருந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள். எனவே பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், தண்ணீர்வசதியுடனும் பராமரிக்கப்பட வேண்டும்.

மேலும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உறுதிமொழி ஏற்கசெய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மூலமாக பொதுமக்களுக்கு கழிவறைகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டும். பள்ளிகளில் பதிலீ ஆசிரியர் பதிவேடு பராமரிக்கவேண்டும். தலைமையாசிரியர்கள் 10 பாடவேளைகள் கற்பித்தல் பணி செய்வதோடு ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை கட்டாயமாக உற்றுநோக்கல் செய்து அதற்குரிய பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தேர்வு, ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றிப்பெறத்தக்கவகையில் மாணவர்களை பன்முகத்திறன் படைத்தவர்களாக உருவாக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் எம்.மாரியப்பன், வி.நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசிய மக்கள்தொகை விழிப்புணர்வு போட்டிகள் நடத்துவதின் அவசியம் குறித்தும், குறிப்பிட்ட தேதிகளில் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், படைப்புகளை அனுப்புவது பற்றியும் பேசினார்கள்.

இந்தக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை சாமி.சத்தியமூர்த்தி, இலுப்பூர் க.குணசேகரன். அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலைக்கல்வி ஜீவானந்தம். உயர்நிலைக்கல்வி கபிலன், தலைமையாசிரியர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சார்ந்த செய்திகள்