
செம்மொழிப் பூங்கா, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவாகும். இந்த பூங்காவை 24 நவம்பர் 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். சாலை ஓரத்தில் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் செம்மொழி பூங்காவை அமைத்தது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்மொழிப் பூங்காவில் ஜூன் 3 ஆம் தேதி மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 3 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 2 நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. பெங்களூர், உதகை, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளைக் கொண்டு இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் 2 ஆவது ஆண்டாக மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் என்றும் தோட்டக்கலைத்துறை கூறியுள்ளது. மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமும் பெரியவர்களுக்கு ரூ.50 நுழைவுக் கட்டணமும் நிர்ணயித்திருப்பதாகத் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.