The main enemy in the Rowdy Sellathurai  case has surrendered!

Advertisment

சேலத்தில் ரவுடி செல்லதுரை படுகொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய எதிரி ஜான் என்கிற சாணக்கியா, சேலம் தனி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப். 4) சரணடைந்தார்.

சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான இவரை, கடந்த 22.12.2020ம் தேதி ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது. இந்த நிலையில், செல்லத்துரை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜான் என்கிற சாணக்கியா, சின்னவர், ஜெகதீஸ் என்ற கொம்பன் ஆகியோர் தலைமறைவாகினர். இதனால் அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க முடியாத சூழல் உருவானது. தேவையில்லாமல் காலம் தாமதம் ஆவதால், இந்த வழக்கு விசாரணையை இரண்டாக பிரித்து நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.

Advertisment

தலைமறைவாக உள்ள ரவுடிகள் மூவரையும் பிடிக்க காவல்துறை உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், ரவுடி சின்னவர் என்பவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில் மற்றொரு முக்கிய ரவுடியான ஜான் என்கிற சாணக்கியா சேலம் தனி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப். 4) சரண் அடைந்தார். இன்னும் ஒரே ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரும் விரைவில் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று தெரிகிறது.